தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்ஐவி பாதிப்பை தெரியப்படுத்தும் சட்டத்தில் திருத்தம்

2 mins read
f6b7ffce-f41e-4819-992e-28aa62b23ff4
எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சையைத் தொடருமாறும் ரத்தத்தில் காணப்படும் கிருமியின் அளவைக் கண்காணிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குலைக்கும் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோர், குறைந்தது ஆறு மாதங்களுக்கு, பரிசோதனையில் கண்டுபிடிக்க இயலாத அளவு மிகக் குறைவான கிருமியைக் கொண்டிருந்தால் அவர்கள் பாலியல் உறவு கொள்வோரிடம் தங்கள் நோய் பற்றித் தெரிவிக்கத் தேவையில்லை.

தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, மார்ச் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது இதற்குக் காரணம்.

கிருமியின் அளவு பரிசோதனையில் கண்டறிய இயலாதபடி குறைவாக இருப்பதைக் காட்டும் பரிசோதனை முடிவுச் சான்றிதழ்களை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் பாலியல் உறவு கொள்ளும் நாளுக்குமுன் ஒன்பது மாதங்கள் அல்லது அதற்குக் குறைவான காலத்தில் அந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும், இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மருத்துவ சிகிச்சையைத் தொடர்வதும் கட்டாயம்.

“எச்ஐவி நோயாளிகள் பரிசோதனையில் கண்டுபிடிக்க இயலாத அளவு மிகக் குறைவான கிருமியைக் கொண்டிருந்து, உரிய சிகிச்சையும் மேற்கொண்டால் அவர்களுடன் பாலியல் உறவு கொள்வோருக்கு அக்கிருமி தொற்றும் அபாயம் இல்லை,” என்று சுகாதார அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோர் தங்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவோருக்கு அக்கிருமி தொற்றக்கூடும் என்பதைத் தெரியப்படுத்துவது கட்டாயம். தவறினால் $50,000 வரையிலான அபராதமோ 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.

மருத்துவத் துறை முன்னேற்றம், எச்ஐவி பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத் தனிநபர்கள் கூடுதலாக ஏற்க வேண்டும் என்ற சிங்கப்பூரின் பொதுச் சுகாதார இலக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப சட்டத் திருத்தம் அமைவதாக திருவாட்டி ரஹாயு கூறினார்.

ஏற்கெனவே சுவீடன், தைவான், அமெரிக்கா போன்றவை, எச்ஐவி கிருமி பாலியல் உறவு கொள்வோருக்குப் பரவும் அபாயம் இல்லாத நோயாளிகள் அதுகுறித்துத் தெரியப்படுத்துவதை வலியுறுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளன என்பதை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்