செங்காங்கில் கடன் முதலை பிரச்சினை தொடர்பில் தொல்லை கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் 40 வயது ஆடவர் ஒருவர் வியாழக்கிழமையன்று (மார்ச் 7) கைது செய்யப்பட்டார்.
மூன்று நாள்கள் காவல்துறை நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், தீவு முழுவதும் கடன் முதலை நடவடிக்கைகள் தொடர்பில் பதிவான மற்ற வழக்குகளிலும் அந்த ஆடவருக்குத் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது எனக் காவல்துறை வெள்ளிக்கிழமை (மார்ச் 8) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஏங்கர்வேல் ரோட்டில் இருக்கும் குடியிருப்பு ஒன்றின் வாயில் கதவைக் கடன் முதலை மிதிவண்டி பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்ததாகத் தங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி பிற்பகல் 1.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
கண்காணிப்புக் கருவியில் பதிவான புகைப்படங்களின் உதவியுடன் அங் மோ கியோ பிரிவைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
அவர்மீது கடன் முதலை பிரச்சினை தொடர்பில் தொல்லை கொடுத்ததாக மார்ச் 9ஆம் தேதி குற்றஞ்சுமத்தப்படும் எனக் காவல்துறை கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு $5,000 முதல் $50,000 வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகள் வரை தண்டனையாக விதிக்கப்படலாம்.