தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய திட்டம் குழந்தைப் பராமரிப்பு சேவைக்கு சலுகைகளை வழங்கும்

2 mins read
49e376c7-6dc8-4681-80ea-0e71aede6515
ஆன்டி எஸ்ஜி (Aunty SG) குழந்தைப் பராமரிப்பு நிறுவனம் - படம்: ஆன்டி எஸ்ஜி

வீட்டில் குழந்தைப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கான புதிய, குழந்தைப் பராமரிப்புத் திட்டம் ஒன்றை தமது அமைச்சு இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்க இருப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குழந்தைப் பராமரிப்புக்கான மற்றொரு தெரிவாக பெற்றோர்களுக்கு இத்திட்டம் உதவும் என்று அவர் கடந்த புதன்கிழமை (மார்ச் 6) தெரிவித்தார்.

வீட்டில் குழந்தைப் பராமரிப்பு சேவை வழங்குவதற்கான கட்டணத்தை கட்டுப்படியானதாக வைத்திருக்க, இத்திட்டத்திற்கு நியமிக்கப்படும் நிறுவனங்களுக்கு ஆரம்பகட்ட குழந்தை மேம்பாட்டு அமைப்பு நிதி அளிக்கும்.

இடைநிலை வருமானக் குடும்பங்கள் தற்போது முன்னணி நிறுவனங்கள் நடத்தும் குழதை பராமரிப்பு சேவைக்கு, சலுகைகளைக் கழித்து, செலுத்தி வரும் கட்டணத்திற்கு ஈடாக புதிய திட்டத்தின் கட்டணங்களை வைத்திருக்க அமைச்சு திட்டமிடுகிறது என்றார் அவர்.

அந்தக் கட்டணம் தற்போது ஏறக்குறைய மாதம் $700 என்ற அளவில் உள்ளது.

இந்தக் கட்டணத்தைச் செலுத்தக்கூடிய இடைநிலை வருமானக் குடும்பங்களின் மாத வருவாய் $10,500 முதல் $12,000 வரை இருப்பதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

பாலர் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய, குறைந்தபட்சம் ஒரு சிங்கப்பூரர் குழந்தையைக் கொண்ட குடும்பங்களைக் குறிப்பிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்துவதில் மேலும் உதவி தேவைப்பட்டால், குழந்தை மேம்பாட்டுக் கணக்கை குடும்பங்கள் பயன்படுத்தலாம் என்று திருவாட்டி சுன் கூறினார்.

குழந்தை மேம்பாட்டுக் கணக்கு என்பது குழந்தைகளின் பாலர் பள்ளிக் கட்டணத்தையும் சுகாதாரப் பராமரிப்புக் கட்டணத்தையும் செலுத்துவதில் உதவிக்கரம் நீட்டுவதற்கான சிறப்புச் சேமிப்புக் கணக்கு.

ஏற்கெனவே குழந்தை வளர்ப்பு சேவையைத் தனியார் அமைப்புகள் நடத்தி வருகின்றன.

அவற்றில் ஒன்றான ‘ஆன்டி எஸ்ஜி’ (Aunty SG) என்னும் குழந்தைப் பராமரிப்பு நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்திய திருவாட்டி லூயிசா லீ, அரசாங்கம் தொடங்க இருக்கும் திட்டத்தையும் கட்டணச் சலுகைகளையும் வரவேற்று உள்ளார்.

அத்தகைய நிறுவனங்கள் தங்களது சேவைக்கு தற்போது $1,180 முதல் $3,500 வரை கட்டணம் வசூலிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
குழந்தை