சிங்கப்பூரில் பெரும்பான்மையோர் வியப்பு மற்றும் அதிர்ச்சித் தகவலைக் கேள்விப்படும்போது ‘அலமா’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.
அதற்கு அடுத்து, சாப்பிடுவதைக் குறிக்கும் ‘மக்கான்’ என்ற சொல்லும் மூன்றாவது இடத்தில், ஒரு விஷயத்தை குறிப்பிட ‘லா’, ‘லோர்’, ‘மே’, ‘லே’ போன்ற சொற்களும் சிங்லிஷாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மொழி கற்றல் நிறுவனமான ‘பிரிபிளை’ 1,500க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களிடம் நடத்திய ஆய்வில் இந்த மூன்றும் அடுத்தடுத்த நிலைகளில் இடம்பெற்றன.
ஆய்வு 16 வயதுக்கும் 50களில் உள்ளோருக்கும் இடைப்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், ஒரு வேலையை மிகவும் நன்றாகச் செய்ததை ‘ஸ்லே’ என்று குறிப்பிடுவது அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் பங்கேற்றோரில் பெரும்பான்மையினருக்கு அந்த ‘ஜென்ஸீ’ தலைமுறையினர் பயன்படுத்தும் அச்சொல் புரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல கவர்ந்திழுக்கும் ஒரு விஷயத்தை ‘ரிஸ்’ என்று தற்போது குறிப்பிட்டு வருவதும் அவ்வளவாகப் புரியவில்லை என்று பலரும் கூறியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிரிபிளை’, இவ்வாண்டின் ஜனவரி மாதத்திற்கும் பிப்ரவரி மாதத்திற்கும் இடையில் ஆய்வை நடத்தியது.
புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் நிலவரத்தையும் சவால்களையும் எடுத்துக்காட்ட அந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் ‘பிரிபிளை’ கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் சீனம், மலாய் ஆகிய மொழிகளின் சொற்கள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் பிற மொழிகளின் சொற்களை ஆங்கிலத்துடன் கலந்து பேசுவது ‘சிங்லிஷ்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆய்வில் பங்கேற்றோரில் 66 விழுக்காட்டினர் ‘அலமா’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவதாகக் கூறினர். ஆய்வறிக்கை வெளியிட்ட பட்டியலின் முதல் இடத்தில் அந்த சிங்லிஷ் சொல் இடம்பெற்றுள்ளது.
சங்கடத்தை வெளிப்படுத்த ‘பைசே’ என்றும் பிறர் விஷயத்தில் ஆர்வமுள்ளதைக் குறிக்க ‘கேப்போ’ என்றும் நல்ல அல்லது சுவையான விஷயத்தைக் குறிப்பிட ‘ஷியோக்’ என்றும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் ஆய்வு வெளியிட்டுள்ள சிங்லிஷ் பட்டியலின் முதல் 10 இடத்தில் உள்ளன.


