நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள புதிய மசோதா, நிதிச் சேவைத் துறையின் மீது விரிவான விசாரணை நடத்தவும் கண்காணிப்பை அதிகப்படுத்தவும் சிங்கப்பூர் நாணய ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
கைதாணை இன்றி சந்தேக நபரின் வளாகத்திற்குள் நுழையும் அதிகாரமும் அதில் அடங்கும்.
மேலும், மூலதனச் சந்தை சேவைகளை வழங்க உரிமம் பெற்றிருப்போருக்கு சட்டபூர்வ உத்தரவுகளையும் ஆணையம் பிறப்பிக்க முடியும்.
அத்துடன், வெவ்வேறு வகையான மேலும் அதிக நிதி நிறுவனங்களின் உயர்பதவி நியமனங்களுக்கு இனிமேல் ஆணையத்தால் அனுமதி வழங்க முடியும்.
ஆணையத்திற்கு இதுபோன்ற அதிகாரங்களை வழங்கும் மசோதா கடந்த வியாழக்கிழமை (மார்ச் 7) நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதா வாசிப்பின்போது பேசிய வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், ஆணையம் தனது ஒழுங்குமுறை நிர்வாகத்திறனை கூடுதல் ஆற்றலுடன் செயல்படுத்தவும் மூலதனச் சந்தைகளின் நிதி நிறுவனங்களை மேலும் அதிகமாகக் கண்காணிக்கவும் அதிகாரம் வழங்கும் என்றார்.
“இவ்வாறு கூடுதல் அதிகாரம் அளிப்பதன் மூலம் பாதுகாப்பான, நம்பகமான அனைத்துலக நிதி மையம் என்னும் சிங்கப்பூரின் நிலையை மேலும் வலுப்படுத்த முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தங்களில் ஒன்று, ஆதாரங்களைத் திரட்டும் ஆணையத்தின் ஆற்றலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் திரு டான் தெரிவித்தார்.

