தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் 440 மெகாவாட் எரிசக்தித் திட்டத்தைப் பெற்ற செம்ப்கார்ப்

1 mins read
bd1e4b1d-7e17-4aa9-8bae-466b82ad10b1
இந்தியாவில் செயல்படுத்தவிருக்கும் புதிய திட்டத்தால், செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீசின் புதுப்பிக்கக்கூடிய மொத்த எரிசத்தித் திறன் 14.3 கிகாவாட்டாக உயரும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்ஜேவிஎன் எனப்படும் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எரிசக்தி உற்பத்தி நிறுவனம், 440 மெகாவாட் காற்றாலை-சூரியசக்தி மின்உற்பத்தித் திட்டத்தை சிங்கப்பூரின் செம்ப்கார்ப் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், செம்ப்கார்ப் நிறுவனம் மின் உற்பத்தி ஆலையின் உரிமையாளராக அதைக் கட்டி, செயல்படுத்தும் அனுமதியைப் பெற்றுள்ளது.

இது, 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் எஸ்ஜேவிஎன் அறிவித்த 1.5 கிகாவாட் மின்உற்பத்தித் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.

இதன் மூலம் உற்பத்தியாகும் எரிசக்தி, எஸ்ஜேவிஎன் நிறுவனத்திற்கு விற்கப்படும்.

25 ஆண்டுகால எரிசக்திக் கொள்முதல் ஒப்பந்தத்தின்கீழ் எரிசக்தி அவ்வாறு விற்கப்படும் என்று மார்ச் 11ஆம் தேதி செம்ப்கார்ப் நிறுவனம் தெரிவித்தது.

அந்த ஒப்பந்தம் கையெழுத்தான 24 மாதங்களுக்குள் திட்டம் வர்த்தக ரீதியான செயல்பாட்டுக்குத் தயாராகிவிடும் என்று எதிர்பார்ப்பதாக செம்ப்கார்ப் குறிப்பிட்டது.

திட்டத்திற்கான நிதியை பல்வேறு நிதி ஒதுக்கீடுகள், கடன் போன்ற திட்டங்கள் மூலம் வழங்கவிருப்பதாக அது கூறியது.

இந்தியாவில் செயல்படுத்தவிருக்கும் புதிய திட்டத்தால், செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீசின் புதுப்பிக்கக்கூடிய மொத்த எரிசத்தித் திறன் 14.3 கிகாவாட்டாக உயரும். இன்னும் கையகப்படுத்தப்படாத, 245 மெகாவாட் உற்பத்தித் திட்டமும் இதில் அடங்கும்.

இந்தத் திட்டத்தால், 2024 டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிதியாண்டில் செம்ப்கார்ப்பின் பங்கு வருவாயில் தாக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்