டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மாதுமீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) குற்றம் சுமத்தப்பட்டது.
அவர் இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்ததாகவும் நுழைச்சீட்டுக்கான பணத்தைப் பெற்ற பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 29 வயது மாதின் பெயர் ஃபூ மெய் கி.
அவர், இக்குற்றத்தை 2023ஆம் ஆண்டுச் செப்டம்பர் 13ஆம் தேதி புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அன்று ஃபூ, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து $350 பணம் பெற்று ஏமாற்றியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
இவ்வாண்டு மார்ச் 2ஆம் தேதி, அமெரிக்க இசைக் கலைஞர் டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுத் தன்னிடம் இருப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணை ஃபூ நம்ப வைத்தார் எனக் கூறப்பட்டது.
இதுபோன்ற வேறு பல மோசடி வழக்குகளிலும் ஃபூவுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
அந்த மோசடிகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தின் மதிப்பு 24,000 வெள்ளிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 3ஆம் தேதிக்கும் 7ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இணைய வர்த்தகத் தளமான கெரோசல் டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு மோசடியில் ஒரு பெண் ஈடுபடுவதாகத் தங்களுக்குப் புகார் வந்தது எனக் காவல்துறை திங்கட்கிழமை (மார்ச் 11) தெரிவித்தது.
நுழைவுச்சீட்டுக்கான பணத்தை வங்கி பரிமாற்றம் அல்லது ‘பேநவ்’ மூலம் பெற்றுகொண்ட பிறகு அவர் நுழைவுச்சீட்டைத் தர தவறிவிட்டார் என்றும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததாகக் காவல்துறை கூறியது.
அங் மோ கியோ காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அப்பெண்ணை அடையாளம் கண்டு, மார்ச் 11ஆம் தேதி கைது செய்தனர்.
ஃபூ மீதான வழக்கு விசாரணை மார்ச் 19 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

