வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் வெளியீடு

2 mins read
158a44ae-08cb-450e-a1ee-ea269f69dede
கவிஞர் வைரமுத்து. - படம்: எழுமின் அமைப்பு
multi-img1 of 3

எழுமின் அமைப்பு, 8 பாயிண்ட் எண்டர்டைன்மெண்ட், 3 டாட் மூவீஸ் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் அறிமுக விழா, சிங்கப்பூரில் மார்ச் 9 சனிக்கிழமை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வைரமுத்து இயற்றிய அனைத்துலகத் தமிழ்த்தாய் வாழ்த்தை டாக்டர் பாக்யா மூர்த்தியின் மாணவியர் பாடினார்கள். ஏகேடி நடனக் குழுவினர் ஐம்பூதங்களை விவரிக்கும் வகையில் நடனமாடி விருந்தினர்களை மகிழ்வித்தனர்.

மகா கவிதை நூலின் உள்ளடக்கம் ஐம்பூதங்களைக் கருப்பொருளாகக் கொண்டது என்பதால் ஐந்து பேர் என்பது விழாவின் எல்லா அங்கங்களிலும் பொதுவாக இருந்தது.

நபீலா நிசார் ஒருங்கிணைத்த 10 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கவிஞரின் திரையிசைப் பாடல்களிலிருந்து ஐம்பூதங்களைப் பற்றிய வரிககளுக்கு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

புவி வெப்பமாதல் சூழல் குறித்த மிகத் தேவையான கருத்துகளை இந்நூல் பேசுகிறது என்று நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு இரா.தினகரன் பாராட்டினார்.

மலேசிய இந்தியக் காங்கிரசின் துணைத் தலைவரும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினருமான  சரவணன், வைரமுத்துவின் எழுத்துகள் குறித்த தமது 40 ஆண்டு கால வாசிப்பு அனுபவத்தைச் சுவைபட விளக்கினார்.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணை விரிவுரையாளர் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், ‘மகா கவிதை’ நூலை ஆய்வுரை செய்தார்.

“மகா கவிதை” நூலை வைரமுத்து வெளியிட, தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழர் பேரவையின் தலைவர் சஞ்சய் முத்துக்குமரனும் சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் இளைஞர் மன்றத்தின் தலைவர் செல்வி அஸ்வினியும் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வை இலக்கியச் சொற்பொழிவாளரும் வழக்கறிஞருமான சி.பாண்டித்துரை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்