தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணிகள் எண்ணிக்கை: புதிய உச்சத்தைத் தொட்ட சாங்கி விமான நிலையம்

2 mins read
99db1c13-d335-4f64-9299-7deff2314ee0
பிப்ரவரி மாதம் மட்டும் 5.35 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையம் வழியாக பயணம் செய்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் கொவிட்-19க்கு முந்தைய காலத்தில் பதிவான பயணிகளின் எண்ணிக்கையை விட தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது பயணிகளின் எண்ணிக்கை.

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 5.35 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையம் வழியாக பயணம் செய்துள்ளனர்.

ஆக அதிகமாக பிப்ரவரி 18ஆம் தேதியன்று 203,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சீனப் புத்தாண்டு விடுமுறை காலம் என்பதால் அந்த நாளில் அதிகமானோர் பயணம் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் இவ்வளவு அதிகமான பயணிகளை கையாண்டது 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் என்று சாங்கி விமானநிலைய குழுமம் கூறியது.

பிப்ரவரி மாத நிலவரப்படி சாங்கி விமான நிலையத்தை 93 விமான நிறுவனங்களின் விமானங்கள் பயன்படுத்துகின்றன. வாரம் 6,900க்கும் அதிகமான விமானங்கள் சாங்கி விமான நிலையம் வழி பயணம் மேற்கொள்கின்றன. சிங்கப்பூரில் இருந்து 150க்கும் அதிகமான நகரங்களுக்கு விமானச் சேவைகள் உள்ளன.

கொவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டன. நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு 2023ஆம் ஆண்டு முதல் பயணத்துறை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது.

கடந்த ஆண்டு சாங்கி விமான நிலையத்தை 58.9 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். 2019ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 68.3 மில்லியன் பயணிகளாக இருந்தது.

இந்த ஆண்டு விமான நிலையங்களுக்கு முக்கியமான ஆண்டு. பயணத்திற்கான தேவை அதிகரிக்கும் என்பதால் பழைய நிலைக்கு பயணிகள் எண்ணிக்கை வரும் அதனால் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும் என்று ஆண்டின் தொடக்கத்தில் சாங்கி விமானநிலைய குழுமம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்