ஆகஸ்ட்டில் மீண்டும் சிங்கப்பூர்த் தோட்ட விழா

ஆகஸ்ட்டில் மீண்டும் சிங்கப்பூர்த் தோட்ட விழா

2 mins read
de9afc8e-8b30-4d4b-9487-7a1eec96b173
சிங்கப்பூர்த் தோட்ட விழாவின் முன்னோட்டக் காட்சி தக்காஷிமாயா கடைத்தொகுதியில் மார்ச் 14ஆம் தேதி தொடங்கியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒன்பதாவது முறையாக நடைபெறும் சிங்கப்பூர்த் தோட்ட விழா வரும் ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறவிருக்கிறது.

தேசியப் பூங்காக் கழகம் ஏற்று நடத்தும் இவ்விழா, ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும்.

ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிங்கப்பூர்த் தோட்ட விழா, உலகளாவிய தாவரவியல் தோட்ட மாநாடு எனும் சிங்கப்பூர்ப் பூமலை, அனைத்துலக தாவரவியல் தோட்ட பழைமைப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியுடன் இணைந்து இடம்பெறும். அந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 6 முதல் 9ஆம் தேதி வரை சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும்.

இந்த மாநாடு தென்கிழக்காசியாவில் முதல்முறையாக நடைபெறுகிறது. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், தாவரவியல் தோட்டக் கலைஞர்கள், தாவரவியல் பாதுகாப்பு, ஆராய்ச்சி, கல்வி ஆகியவை பற்றி அனைத்துலக அளவில் புகழ்பெற்ற பேச்சாளர்கள் உரையாற்றுவார்கள்.

தோட்ட விழாவில் விருது பெற்ற அனைத்துலக மற்றும் உள்ளூர் வடிவமைப்பாளர்கள், சமூக தோட்டக்காரர்கள், செடி வளர்ப்பு ஆர்வலர்கள் ஆகியோர் நிலவனப்பு, மலர்ப் படைப்புகள் பற்றி பேசுவதுடன் தங்களின் கைவண்ணத்தையும் காட்டுவார்கள்.

சிங்கப்பூர்த் தோட்ட விழாவின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அதன் முன்னோட்டக் காட்சியை மார்ச் 14 முதல் 17ஆம் தேதி வரை தக்காஷிமாயா கடைத்தொகுதியில் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். அனுமதி இலவசம்.

வருகையாளர்கள், காலிஃபுளவர், மிளகாய், பாண்டான் போன்றவற்றை உள்ளடக்கிய 24 மலர், காய்கறிப் படைப்புகளைக் காணலாம்.

பல்வேறு வகையான ஆர்க்கிட் மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

மார்ச் 15ஆம் தேதியன்று, ஃபுளோரல் ஃபியேஸ்டா நேரடிப் போட்டியில் பங்கேற்போர், பலவித மலர்களைக் கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்துவர். மலர்க் காட்சிக்கு வருவோர் அதைப் பற்றிய உரைகளைக் கேட்டு, மலர்கள் பற்றியும் அவற்றை வளர்க்கும் முறைகளையும் தெரிந்துகொள்ளலாம்.

ஆகஸ்ட்டில் நடைபெறும் சிங்கப்பூர்த் தோட்ட விழாவுக்கான நுழைவுச்சீட்டுகளைக் கழிவு விலையிலும் பார்வையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

“கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பின் பெரிய அளவில் நடத்தப்படும் சிங்கப்பூர்த் தோட்ட விழாவுக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக வருகையாளர்களை வரவேற்கக் காத்திருக்கிறோம்,” என்றார் தேசியப் பூங்காக் கழகத்தின் விழாக்கள் ஒருங்கிணைப்பு இயக்குநர் டெனிஸ் லிம்.

குறிப்புச் சொற்கள்