உட்லண்ட்ஸ் அருகே கண்டுபிடிக்கப்பட்ட மலேசிய ஆடவரின் சடலம்

உட்லண்ட்ஸ் அருகே கண்டுபிடிக்கப்பட்ட மலேசிய ஆடவரின் சடலம்

படம்: கூகல் வரைபடம்

15 Mar 2024 - 11:55 am

1 mins read

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் செனோக்கோ வே நீர்ப்பரப்பிற்கு அருகே மார்ச் 11ஆம் தேதி, 51 வயது ஆடவரின் சடலம் காணப்பட்டது.

அவர் மலேசியர் என்று நம்பப்படுவதாகவும் தனியார் வாடகை கார் ஓட்டுநராக அவர் பணிபுரிந்ததாகவும் ஜோகூர் காவல்துறையை மேற்கோள்காட்டி, மலேசிய ஊடகமான சின் சியூ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

மார்ச் 11ஆம் தேதி காலை ஆறு மணியளவில், ஜோகூரின் பெர்மாஸ் ஜெயா பாலத்தில் அந்த ஆடவரின் கார் காணப்பட்டது. அவரது அடையாள அட்டையும் கைப்பேசியும் அந்த காரில் இருந்தன என்று ஜோகூர் காவல்துறை கூறியது.

அவரைத் தேட முற்பட்ட ஆடவரின் குடும்பத்தினர், தகவல் தெரிந்தோர் அல்லது அருகில் பயணம் செய்த வாகனங்களின் கேமராப் பதிவுகளுக்கு சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் அந்த ஆடவரின் சடலம் சிங்கப்பூர் நீர்ப்பரப்பில் கரை ஒதுங்கியிருந்ததாக சின் சியூ நாளேடு தெரிவித்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் காவல்துறை, 27 செனோக்கோ வே பகுதிக்கு அருகே யாரோ நீரில் மூழ்கி மாண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகப் பிற்பகல் 3.24 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறியது.

ஆடவரின் உடல் நீரிலிருந்து மீட்கப்பட்டதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குற்றம் ஏதும் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்
உட்லண்ட்ஸ்மலேசியாசடலம்ஆடவர்