சோல்: தென்கொரியா வரும் வாரம் ஜனநாயகம் தொடர்பாக உலக உச்சநிலை மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது.
உலகம் முழுவதும் உரிமைகளும் சுதந்திரமும் பறிக்கப்படுவதாகக் கூறி அமெரிக்கா தெரிவிக்கும் கருத்துக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் அது இந்த மாநாட்டை ஏற்று நடத்தவுள்ளது.
மாநாட்டில் எந்தெந்த நாடுகள் பங்கேற்கும் என்று தென்கொரியா விவரங்களை வெளியிடவில்லை. எனினும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் தலைமையில் அமெரிக்கா ஒரு குழுவை அனுப்பும் என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
“இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறும் ஆண்டு என்று கூறப்படும் நிலையில் அடுத்த வாரம் நடக்கவுள்ள இந்த மாநாடு ஒரு இக்கட்டான தருணத்தில் நடைபெறுகிறது,” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்ற மூத்த இயக்குநரான கெல்லி ரசோக் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
ஜனநாயகத்துக்கு எதிரான மின்னிலக்க அச்சுறுத்தல்கள், செயற்கை நுண்ணறிவு, ஒருவர் பேசுவதுபோல் மற்றொருவரை வைத்துப் பொய்யுரை பரப்புவது போன்ற பிரச்சினைகள் மாநாட்டில் எடுத்துக்கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த மாநாட்டில் ஜனநாயகத்துக்கு பாதகம் ஏற்படா வண்ணம், மனிதர்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எப்படி என்று விளக்கமளிக்கப்படும். அதற்கு ஒத்துழைக்கும்படியும் கோரிக்கை விடப்படும்” என்று தென்கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கியோன் கி-ஹுவான் வியாழனன்று தமது கட்டுரை ஒன்றில் தெரிவித்தார்.
மாநாட்டில் உளவு பார்ப்பதன் மூலம் சேகரிக்கப்படும் வர்த்தகத் தகவல்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்க அமெரிக்க தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெறும் என்று, திருவாட்டி ரசோக் சொன்னார்.
“இதன் தவறான பயன்பாடு உலகில் பலர் தங்களைப் பற்றிக் கூறுவதிலும் கருத்துகள் தெரிவிப்பதிலும் மிகப் பெரிய முறையில் பாதித்துள்ளது,” என்று திருவாட்டி ரசோக் தெரிவித்தார்.

