பாலி விமான நிலையத்தில் மின்னிலக்கக் குடிநுழைவு முகப்புகள்

பாலி விமான நிலையத்தில் மின்னிலக்கக் குடிநுழைவு முகப்புகள்

2 mins read
97566cba-65d1-49cd-921c-522307fa864d
பாலித்தீவின் இங்குரா ராய் அனைத்துலக விமான நிலையத்தில் புதிய தானியக்க முகப்புகளின் மூலம் 25 வினாடிகளில் குடிநுழைவு நடைமுறையைப் பூர்த்தி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்தோனீசியாவின் பாலித்தீவிற்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் இனி குடிநுழைவு நடைமுறைகளை விரைவாகப் பூர்த்தி செய்யலாம்.

அங்குள்ள இங்குரா ராய் அனைத்துலக விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 30 தானியக்க முகப்புகள் இதனைச் சாத்தியமாக்குகின்றன.

மார்ச் 6ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட அந்த தானியக்க முகப்புகள் மூலம் 15 முதல் 25 வினாடிக்குள் ஒருவர் குடிநுழைவு நடைமுறைகளை நிறைவுசெய்யலாம் என்று இந்தோனீசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கூறினார்.

தானியக்க முகப்புகளைப் பயன்படுத்த விரும்பும் வெளி நாட்டினர் ‘பயோமெட்ரிக்’ கடப்பிதழ்களைக் கொண்டிருப்பதும் தங்கள் வருகை குறித்து இணையம்வழி முன்பதிவுசெய்வதும் கட்டாயம்.

தானியக்க முகப்புகள் மூலம் குடிநுழைவுச் சோதனைகளை விரைவாகவும் எளிதாகவும் அதே நேரத்தில் பாதுகாப்புக்குப் பங்கம் நேராமலும் நிறைவுசெய்யலாம் என்று இங்குரா ராய் குடிநுழைவு அலுவலகம், மார்ச் 7ஆம் தேதி இன்ஸ்டகிராமில் பதிவிட்டது.

தானியக்க முகப்புகளைப் பயன்படுத்த, வருகையாளர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள், கடப்பிதழின் நகல், புகைப்படம் ஆகியவற்றைக் குடிநுழைவுத் துறை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மற்றொரு பதிவில் அது குறிப்பிட்டது.

சிங்கப்பூரர்களும் இதர ஆசியான் நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதிகபட்சம் 30 நாள்கள் பாலி வந்தால் அவர்களுக்கு விசா தேவையில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும், வெளிநாட்டினர் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 150,000 ரூப்பியா (S$13) சுற்றுலா வரி செலுத்துவது அவசியம்.

புதிய தானியக்க முகப்பு நடைமுறை, இந்தோனீசியாவின் சுற்றுலாத்துறை, பொருளியல் வளர்ச்சி, தேசிய மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலித் தீவிற்கு விரைவான குடிநுழைவு நடைமுறையின்கீழ் செல்ல உதவும் திட்டத்தை வரவேற்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சிங்கப்பூரர்கள் கூறினர். சென்ற ஆண்டு (2023) பாலித் தீவிற்கு 236,203 சிங்கப்பூரர்கள் வருகையளித்ததாக இந்தோனீசியப் புள்ளிவிவரத் துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்