அனைத்துலக கார் பந்தயங்களில் பங்கேற்கும் என்டியு

2 mins read
6d6e4f5d-2b1a-41cd-8d43-909e4945af03
பிரிட்டனில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா ஸ்டூடண்ட் பந்தயத்திற்கு சிங்கப்பூர் மாணவர்கள் உருவாக்கிய கார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), இந்த ஆண்டு (2024) நடைபெறவிருக்கும் இரண்டு அனைத்துலக கார் பந்தயங்களுக்குத் தயாராகி வருகிறது.

ஏப்ரல் 27ஆம் தேதி அபுதாபியின் யாஸ் மரினா பந்தயத் தடத்தில் நடைபெறும் தானியக்க கார் பந்தயத்தில் (ஓட்டுநரில்லா கார்களுக்கானது), என்டியு உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு வழிமுறையின்கீழ் இயங்கும் ஃபார்முலா 3 கார் பங்கேற்கும்.

என்டியுவின் ஆய்வுக் குழுவும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கின்ட்சுகி நிறுவனமும் இணைந்து தயாரித்த அந்தத் தானியக்க காரில் ஏழு கேமராக்கள், ஒளியை உணரும் லிடார் கருவிகள் மூன்று, ரேடார் கருவிகள் நான்கு ஆகியவற்றுடன் ‘ஜிபிஎஸ்’ கட்டமைப்பு ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும்.

690 கிலோகிராம் எடையுள்ள அந்த கார் மணிக்கு 300 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

எட்டு குழுக்கள் பங்கேற்கும் அபுதாபி போட்டியில் பங்கேற்கும் ஒரே தென்கிழக்காசியக் குழு என்ற சிறப்பு என்டியு குழுவைச் சாரும்.

அடுத்ததாக, ஜூலை 17 முதல் 21 வரை, பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் பந்தயத் தடத்தில் நடைபெறும் ஃபார்முலா ஸ்டூடண்ட் பந்தயத்தில் என்டியு மாணவர்கள் தயாரிக்கும் மின்கார் பங்கேற்கும்.

உலகெங்குமிருந்து கிட்டத்தட்ட 80 குழுக்கள் கலந்துகொண்ட சென்ற ஆண்டின் போட்டியில் என்டியு குழு 41வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கும் புதிய கார் 300 கிலோகிராமுக்குக் குறைவான எடையைக் கொண்டிருக்கும்.

அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் அந்த காருக்கு உண்டு.

குறிப்புச் சொற்கள்