பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘பெட்எக்ஸ்போ 2024’ மார்ச் 15 முதல் 17 வரை சிங்கப்பூர் எக்ஸ்போ மண்டபம் 5B, 6ல் நடைபெற்று வருகிறது.
மக்கள் தம் செல்லப்பிராணிகளோடு அங்கு சென்று அவற்றுக்கான உணவுகள், உடைகள், பொருள்களை வாங்கி மகிழலாம். அவர்கள் பலவித விளையாட்டுகள், நடவடிக்கைகள், பயிலரங்குகள், போட்டிகள் ஆகியவற்றிலும் பங்கேற்கலாம்.
புதிதாகச் செல்லப்பிராணியைத் தத்தெடுக்க அல்லது வாங்க விரும்புவோருக்கும் பலவகையான உதவிக் குறிப்புகளை இக்கண்காட்சி வழங்கும்.
இவ்வாண்டு 50% அதிகமான நிகழ்ச்சி இடம், 200 பங்கேற்கும் நிறுவனங்கள், 128 காட்சிப்படுத்தும் அமைப்புகளுடன் பெரிய அளவில் நடைபெறுகிறது பெட்எக்ஸ்போ. புதிய நீர்வாழ் செல்லப்பிராணி அங்கமும் இவ்வாண்டு இடம்பெறுகிறது.
மேலும், ‘பெட்எக்ஸ்போ’, ‘லாலாமூவ்’வின் சேவையை உட்புகுத்துவதால், மக்கள் தாங்கள் வாங்கிய கனமான பொருள்களைச் சுலபமாக வீட்டிற்கு அனுப்பலாம்.
காப்பாற்றப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு மறுவாழ்வு அளிக்க பல செல்லப்பிராணி நல அமைப்புகளும் ‘பெட்எக்ஸ்போ’வில் பங்குபெறுகின்றன.
“மக்கள் செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்க முன்வந்தால் எங்களால் கூடுதல் செல்லப்பிராணிகளைப் பராமரிக்க முடியும்,” என்றார் ‘செல்லப்பிராணி அன்பர்கள் லீக்’ எனும் விலங்குக் காப்பகத்தில் பத்து ஆண்டுகளாகத் தொண்டாற்றிவரும் சுமதி அய்யாவு.
பெட்எக்ஸ்போ பற்றிய மேல்விவரங்களுக்கு https://petexposg.com இணையத்தளத்தை நாடலாம். இணையவழி நுழைவுச்சீட்டுகளை வாங்குவோருக்குக் கட்டணம் குறைவு. செல்லப்பிராணிகளுக்கும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் மெர்டேக்கா, முன்னோடித் தலைமுறை அட்டை வைத்திருப்போருக்கும் அனுமதி இலவசம்.

