தன் சக ஊழியருடன் சேர்ந்து மூன்று ஆண்டுகளாக தச்சு நிறுவனத்தில் தனது முதலாளியை மொத்தம் $317,710 ஏமாற்றிய கணக்குப் பதிவியல் மேலாளருக்கு வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சியாங் லாய் ஃபா எனும் 37 வயது மேலாளர், தன்னுரிமை ஊழியர்களுக்கான கட்டணங்களுக்கு ஒப்புதல் அளிக்க முதலாளி காய் மில்வோர்க் நிறுவனம் அதிகாரம் வழங்கியிருந்தது. ஆனால் சியாங் பொய்யான விலைப்பட்டியலுக்குப் பணம் செலுத்துவது போல் பாசாங்கு செய்து அப்பணத்தைத் தனக்கு வைத்துக்கொண்டார். அவரது நண்பர்களான ஒரு ஜோடியிடம் பொய் சொல்லி, அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து $171,000க்கு மேல் தனது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டார்.
ஏமாற்றியது, ஏமாற்றுதலுக்கு உதவியாக இருந்தது ஆகிய குற்றங்களை மார்ச் 15ஆம் தேதி ஒப்புக்கொண்ட சியாங்குக்கு பத்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. $145,720 பணத்தைக் கையாடிய மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
சியாங்குடன் வேலை செய்யும் டியோ சின் ஸென் என்ற ஜேசன், தங்களின் நிறுவனத்தை ஏமாற்றும் ஒரு திட்டத்தை சியாங்கிடம் பரிந்துரைத்தார். அந்நிறுவனத்தின் மேலதிகாரியான ஜேசன், தன்னுரிமை ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் அவர்களுக்கான ஊதியத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கும் அதிகாரம் பெற்றிருந்தார்.
நிறுவனத்தில் செய்த வேலைகளைத் தன்னுரிமை ஊழியர்கள் செய்தார்கள் என்று பொய்யுரைத்து, போலியான விலைப் பட்டியல்களைத் தயாரித்து அதை சியாங்கின் ஒப்புதலுக்கு அனுப்புவார். காரணம், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் செய்யும் வேலைக்குத் தரகுக் கட்டணம் கிடையாது.
திட்டமிட்டபடி, சியாங் அந்த விலைப்பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தவுடன், போலியான ‘தன்னுரிமை ஊழியர்கள்’ அந்தப் பணத்தை ஜேசனுக்கு மாற்றி விடுவார்கள். இந்த மோசடியை சேர்ந்து செய்வதற்கு சியாங்குக்கு ஒரு தொகை வழங்கப்பட்டது.
2022ல் தனது தோழிக்குத் தெரிந்தவருடைய கணவரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவது பற்றி கேட்டு, அதிலும் சியாங் வெற்றி பெற்றார். வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூறி, அதனால்தான் அந்தக் கணவரின் வங்கிக் கணக்குத் தேவைப்படுகிறது என்று பொய் சொன்னார். வங்கிக் கணக்குக்குப் பணம் வந்து சேர்ந்தவுடன் தோழி பணத்தை எடுத்து சியாங்கின் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடுவார். பின்னர் அந்தப் பணம் ஜேசனின் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடப்படும்.
இந்த முறைப்படி அந்தக் கணவரின் வங்கிக் கணக்குக்கு 15 முறை மொத்தம் $171,990 வெளிநாட்டு ஊழியரின் ஊதியமாக மாற்றி விடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மோசடி செய்த பணத்தில் சியாங் $82,000 பெற்றார் என்றும் அவருக்கு 10 மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நிக்கோல் டியோ நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.
சியாங் தான் பெற்ற பணம் அனைத்தையும் நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைத்து விட்டார்.
நிறுவனத்தில் சில குளறுபடிகள் நடந்த சந்தேகத்தின் பேரின் ஜேசனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, சியாங்கின் குற்றச்செயல்களும் வெளிச்சத்துக்கு வந்தன.
ஜேசனின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாக அறியப்படுகிறது.

