தீயணைப்பு நீர்க்குழாய்கள் கொண்டு நாய் விளையாட்டு பொம்மைகள்

தீயணைப்பு நீர்க்குழாய்கள் கொண்டு நாய் விளையாட்டு பொம்மைகள்

2 mins read
a3888b82-fa7f-41c0-90d4-fe5c1b50aad9
தீயணைப்பு நீர்க்குழாய்கள் நாய் விளையாட்டுப் பொருள்களாக மாற்றம் கண்டுள்ளன. - படம்: குடிமைத் தற்காப்புப் படை

தீயை அணைக்கப் பயன்படுத்தப்படும் நீர்க்குழாய்களைக் கொண்டு நாய் விளையாட்டுப் பொம்மைகளைக் குடிமைத் தற்காப்புப் படை தயாரித்துள்ளது.

மார்ச் மாதம் நீர்க்குழாய்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த விளையாட்டுப் பொருள்கள் நீடித்து நிலைத்திருக்கக்கூடியவை என்று கூறப்படுகிறது. இவற்றை குடிமைத் தற்காப்புப் படை விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளது.

இது குறித்து குடிமைத் தற்காப்புப் படை மார்ச் 15 அன்று தனது ஃபேஸ்புக் பதிவில், “பல்லாண்டு காலமாக தீயணைப்பில் ஈடுபட்டிருந்த இந்த நீர்க்குழாய்கள் தங்கள் பயன்பாட்டுக் காலத்தை தாண்டிவிட்டன. அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டு அவை நான்கு கால் விலங்குகளுக்கு இன்பத்தைத் தரும் பொருள்களாக மாற்றம் கண்டுள்ளன,” என்று கூறியது.

அத்துடன், நீடித்த நிலைத்தன்மை முயற்சிகளை தான் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாகவும் பசுமை சுற்றுச்சூழல் சார்ந்த முறையில் எதிர்காலத்துக்கு பங்களிக்க புதிய வழிகளை ஆராயப் போவதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

இணையவாசிகள் குடிமைத் தற்காப்புப் படையின் இந்த முயற்சியை பாராட்டுகின்றனர். அத்துடன் இதன் மூலம் நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபடுமாறு கூறியுள்ளனர்.

ஓர் இணையவாசி தனது ஃபேஸ்புக் பதிவில், “இது நல்ல படைப்பாற்றலுடன் கூடிய சீரிய முயற்சி. விலங்குகளிடம் நட்பார்ந்த முறையில் செயல்படும் குடிமைத் தற்காப்புப் படையின் இந்த முயற்சி மனநிறைவு அளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

“இந்த பொம்மைகளை விற்று விலங்குகள் சரணாலயம் கட்ட நிதி திரட்டுவது குறித்து பரிசீலிக்கவும். நான் இந்த பொம்மைகளை வாங்கத் தயாராக உள்ளேன்,” என்று மற்றோர் இணையவாசி பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்