ஆரம்பகாலக் குறுக்கீடு: பெற்றோர் தனியார் சேவைகளை நாடும் நிலை

ஆரம்பகாலக் குறுக்கீடு: பெற்றோர் தனியார் சேவைகளை நாடும் நிலை

2 mins read
a868ccfc-4650-44ba-98aa-b924caf954c4
சலுகைகள் உள்ள திட்டங்களில் சேர காத்திருக்கவேண்டிய நேரம் அதிகமாக இருப்பதால் பெற்றோர் தனியார்த் துறையை நாடுகின்றனர். - கோப்புப் படம்: சாவ்பாவ்

திரு சை கியாட் கெங், வளர்ச்சிக் குறைபாடு உள்ள கைக்குழந்தைகள், சிறுவர்களுக்கான ஆரம்பகாலக் குறுக்கீட்டுத் திட்டத்தில் (இஐபிஐசி) தனது மகனைச் சேர்க்க முயன்றிருக்கிறார்.

ஒன்றரை வயது ஆன பிறகும் பேசவோ நடக்கவோ முடியாதிருந்த பாப் என்ற அவரின் மகனுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் எனப்படும் தொடர்புத் திறன் குறைபாடு இருந்ததாக அவர் சந்தேகித்தார். மகனை இஐபிஐசி திட்டத்தில் சேர்க்க ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும் என்று அவரிடமும் அவரின் மனைவியிடமும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஓராண்டுக்குப் பிறகும் தாங்கள் விண்ணப்பித்த நிலையம் எவ்வித தகவலையும் தெரியப்படுத்தவில்லை என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து ஆரம்பகாலக் குறுக்கீட்டுக்காக மட்டுமின்றி பாப்பிற்குப் பேச்சு சிகிச்சை போன்றவற்றை வழங்கவும் அந்தத் தம்பதி தனியார் சேவைகளை நாடினர்.

இப்போது பாப்பிற்குப் பல்வேறு அம்சங்களில் சிகிச்சை வழங்கி வழிநடத்த தனியார்த் துறையைச் சேர்ந்த சில நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் 1,600 வெள்ளியைக் கட்டணமாக பாபின் பெற்றோர் வழங்குகின்றனர்.

ஆரம்பகாலக் குறுக்கீட்டைப் பொறுத்தவரை காத்திருப்பு நேரம் காரணமாகப் பெற்றோர் தனியார்த் துறையை நாடுவது சாதாரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புத் திறன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் சிறப்புத் தேவைத் துறையில் சேவைகளுக்கான தேவை கூடியுள்ளது, பயிற்சிபெற்ற, திறமையான நிபுணர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் சலுகைகள் வழங்கும் திட்டங்களுக்கான காத்திருப்பு நேரம் அதிகமாக உள்ளதென சிங்கப்பூர் தொடர்புத் திறன் தகவல் நிலையத்தின் (ஆட்டிசம் ரிசோர்ஸ் சென்டர்) தலைவரும் சிங்கப்பூர் தொடர்புத் திறன் சங்கத்தின் தலைவருமான ஜாலான் புசார் நாடாளுமன்ற உறுப்பனர் டெனிஸ் புவா தெரிவித்தார்.

சென்ற ஆண்டு இஐபிஐசி, இஐபிஐசி-பி ஆகிய திட்டங்களில் சேர்வதற்கு 2,600 சிறுவர்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. இஐபிஐசி, சமூக அமைப்புகள் நடத்தும் திட்டமாகும்.

இஐபிஐசி-பி, குறிப்பிட்ட சில தனியார்த் துறையினர் நடத்துவதாகும். அதற்கான கட்டணத்தின் ஒரு பங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.

2022ஆம் ஆண்டு இத்திட்டங்களில் சேர 3,100 சிறுவர்கள் காத்திருந்தனர். அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு பதிவான எண்ணிக்கை குறைவு.

காத்திருப்பு நேரம் சென்ற ஆண்டு சற்று குறைந்து 7.5 மாதங்களாகப் பதிவானது. 2022ல் அந்த விகிதம் 7.6ஆக இருந்தது. சண்டே டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இத்தகவல்களை வெளியிட்டது.

சென்ற ஆண்டிறுதியில் 23 இஐபிஐசி நிலையங்களிலும் 29 இஐபிஐசி-பி நிலையங்களிலும் மொத்தம் 5,700 இடங்கள் இருந்தன. இஐபிஐசி திட்டத்தில் சென்ற ஆண்டு கூடுதலாக 1,200 இடங்கள் உருவாக்கப்பட்ட பிறகு அந்த எண்ணிக்கை பதிவானது.

இவ்வாண்டு இஐபிஐசி, இஐபிஐசி-பி இரண்டிலும் மேலும் 1,500 இடங்கள் உருவாக்கப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் இம்மாதம் ஆறாம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதோடு, கூடுதலாக நான்கு ஆரம்பகாலக் குறுக்கீட்டு நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சிக் குறைபாடு உள்ள சிறுவர்களுக்கு உகந்த நேரத்தில் ஆதரவளிக்க இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
குழந்தைமருத்துவம்