கார்கள் அற்ற ஞாயிறு; சாலைகளில் மக்கள் உற்சாகம்

கார்கள் அற்ற ஞாயிறு; சாலைகளில் மக்கள் உற்சாகம்

2 mins read
a119c967-1868-4af7-a3e7-4fbb1efd8fea
கார்கள் அற்ற ஞாயிறு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரெம்பிராண்ட் ஸ்ட்ருஜிக், 45, பெரிய சக்கரமுள்ள சைக்கிளை ஓட்டிச் செல்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

மார்ச் 17ஆம் தேதி கார்கள் அற்ற ஞாயிறு பலரை உற்சாகத்தில் மிதக்க வைத்தது.

நகர மையத்தில் உள்ள போக்குவரத்துக்கு மூடப்பட்ட குறிப்பிட்ட சாலைகளில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி, ஆடி, பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கொண்டாட்டம் மீண்டும் ஞாயிறு அன்று திரும்பியது.

உணவு, இசை மற்றும் பிற நடவடிக்கைகளால் குடிமை வட்டாரமே முற்றிலும் மாறியிருந்தது.

சாலைகள் முழுவதும் சைக்கிள் ஓட்டுபவர்கள், மெதுநடையர்கள், சறுக்கு விளையாட்டாளர்கள், குடும்பங்கள், குழந்தைகள் என நிரம்பியிருந்தனர்.

சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம், பாடாங் இடையிலான செயின்ட் ஆண்ட்ரு சாலையில் முகாம்களும் முகப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. பொது இடங்களை முற்றிலும் மாற்றியமைத்து அவை கார்களற்ற இயக்கம் குறித்த விளையாட்டுகள் மற்றும் துடிப்பான உடற்பயிற்சிகளில் மக்களை ஈடுபட வைத்தது.

எஸ்பிளனேட் டிரைவில், ‘கோர்ஃப்பால்’ , ‘பார்கர்’ போன்ற விளையாட்டுகளை பலர் முயற்சி செய்து ரசித்தனர்.

மற்றொரு பக்கத்தில் ஓசிபிசி சைக்கிள் அங்கத்தில் பங்கேற்றவர்கள், பொதுமக்கள், ஓசிபிசி சமூக ஊடகங்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியோருக்கு ஓசிபிசி ஊழியர்கள் கறி பஃப்ஸ் மற்றும் பானங்களை வழங்கினர்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கார்கள் அற்ற ஞாயிறு 2024’ நடை, சைக்கிள் ஓட்டுவது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

கடைசியாக 2019ல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எஸ்பிளனேட் பாலத்தை உள்ளடக்கிய குடிமை வட்டாரம் முதல் மத்திய வர்த்தக வட்டாரம் வரை 5.5 கி.மீட்டர் நீளமுள்ள சாலை மூடப்பட்டது. 2016ஆம் ஆண்டில் கார்கள் அற்ற ஞாயிறு தொடங்கப்பட்டது.

மார்ச் 17ஆம் தேதி நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், பொதுவாக வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் மகிழலாம் என்பதை இந்த நிகழ்வு காட்டுவதாகத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், உட்லண்ட்ஸ் முதல் நகரம் வரை வரவிருக்கும் 21.5 கி.மீ வடக்கு தெற்கு தாழ்வாரத்தை சுட்டிக்காட்டினார்.

இது, 2027ஆம் ஆண்டிலிருந்து முதல் கட்டம் கட்டமாக முடிக்கப்படவிருக்கிறது.

“போக்குவரத்து மாற்றுப் பாதையில் அல்லது நிலத்தடி சுரங்கங்கள் வழியாக திருப்பி விடப்படும். சாலைகள் மட்டத்தில் அதிக இடங்களை சமூக நடவடிக்கைகளுக்காக மாற்ற முடியும் என்றார்.

கார்கள் அற்ற ஞாயிறுக்கு வந்தவர்கள் அனைவரும் மறுபடியும் நிகழ்ச்சி திரும்பியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்