வெளிநாட்டு வர்த்தகத்தில் அதிக சிங்கப்பூர் நிறுவனங்கள்

வெளிநாட்டு வர்த்தகத்தில் அதிக சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
366e8392-5fe1-412b-82af-23f44bacf035
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருக்கும் திரு பீட்டர் ஓங். - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் முதன்முறையாக கடந்த ஆண்டு வெளிநாடுகளில் கால்பதித்தன. கொவிட்-19 பெருந்தொற்று காலத்திற்கு முந்திய நிலையோடு ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டு புதுப்புது வெளிநாட்டுச் சந்தைகளை நாடிய சிங்கப்பூர் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம்.

உலக அளவில் தங்களது எல்லையை சிங்கப்பூர் நிறுவனங்கள் விரிவாக்கும் போக்கு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று தாம் நம்புவதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் பீட்டர் ஓங் தெரிவித்து உள்ளார்.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் தொழில் தொடங்கிய சிங்கப்பூர் நிறுவனங்களின் எண்ணிக்கை 66 விழுக்காடு அதிகம்.

முதல்முறை வெளிநாடுகளில் கிளை தொடங்கிய நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு வர்த்தகத்தைத் தொடங்கினாலும் புதிய சந்தைக்குள் நுழைந்த நிறுவனங்கள் தொடர்புடையது இந்த எண்ணிக்கை.

இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருக்கும் திரு ஓங், தமது பதவிக்காலத்தில் நிகழ்ந்த சிறப்பான அம்சங்களை செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது அவர் கூறுகையில், “உலகமயமாதல் என்பது பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய, முதல்முறை வெளிநாடு செல்லும் நிறுவனங்களுக்கு உரியது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆண்டுகளாக 2023 மற்றும் 2024 அமைந்துள்ளன.

“கொவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய மாற்றத்தால், சிங்கப்பூர் நிறுவனங்கள் தற்போது சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்து இருப்பது நமக்குப் பெரியதோர் ஊக்குவிப்பு.

“முன்பெல்லாம், சிங்கப்பூருக்கு உள்ளேயே ஏதாவது முயற்சி செய்வது, உள்ளூர் சந்தைகளில் ஏதேனும் பெரிதாக சாதிக்க முயல்வது என்பன இங்குள்ள நிறுவனங்களின் போக்காக இருந்தன.

“ஆனால், முன்னேறுவதற்கு வெளிநாடுகளை நோக்கி நிறுவனங்கள் செல்லத் தொடங்கி உள்ளதே தற்போதைய நிலைமை. இது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் போக்கு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

“ஒரு நிறுவனம் செயல்படத் தொடங்கியதுமே வெளிநாட்டிலும் வர்த்தகத்தைப் பரப்ப வேண்டும் என்பது அதன் திட்டத்தில் ஒரு பகுதியாக அமைவது இன்றியமையாதது.

“ஏனெனில், உள்ளூர்ச் சந்தை மிகவும் சிறியது. தங்களது அளவையும் வளர்ச்சியையும் பெரிதாக்க விரும்பும் நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வெளிநாடுகளை நோக்கிச் செல்வதுதான்,” என்றார் திரு ஓங்.

ஏப்ரல் 1 முதல் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் புதிய தலைவராக திரு லீ சுவான் டெக் பொறுப்பேற்க உள்ளார். அவர் தற்போது அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
வர்த்தகம்