அம்மான்: வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தமது மத்திய கிழக்குப் பயணத்தின்போது, பாலஸ்தீனம், இஸ்ரேல், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், எகிப்து, சவூதி அரேபியா போன்றவற்றுக்குச் செல்லவிருக்கிறார்.
மார்ச் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அவர் அந்தப் பகுதிகளுக்குச் செல்வார்.
மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு அலெக்ஸ் யாம், திருவாட்டி நடியா அகமது சம்டின், திருவாட்டி ரேச்சல் ஓங், திரு ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம், பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெரால்ட் கியாம் ஆகியோரும் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளும் அமைச்சருடன் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் மார்ச் 17ஆம் தேதி ஜோர்தானியத் தலைநகர் அம்மான் சென்றுசேர்ந்தனர்.
அங்குள்ள சிங்கப்பூர் மாணவர்களுடனான நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டனர்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன நிவாரண அமைப்பிடம் (யுஎன்ஆர்டபிள்யூஏ) $6.1 மில்லியனுக்கான காசோலை வழங்கப்பட்ட நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்குகொண்டனர்.
காஸா மக்களுக்கு உதவுவதற்காக சிங்கப்பூரின் ரஹ்மதான் லில் அலமின் அறக்கட்டளை (ஆர்எல்ஏஎஃப்) சென்ற ஆண்டு (2023) திரட்டிய அறநிதியின் ஒரு பகுதித் தொகை அது.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் மத்திய கிழக்குப் பயணம் மார்ச் 15ஆம் தேதி தொடங்கியது. முன்னதாக, கத்தார், ஜோர்தான் ஆகியவற்றின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது இருவரும் ஜோர்தானிய மன்னர் இரண்டாம் அப்துல்லாவைச் சந்தித்தனர்.