வரும் மார்ச் 24ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, புனிதமரம் பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத் காவடி மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெறவுள்ளன.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக முருகப் பெருமானுக்கு சிறப்பு ஆறுபடை வீடு அலங்காரம் இடம்பெறும்.
திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். பங்குனி உத்திரத் திருவிழாவின் முந்தைய தினமான சனிக்கிழமையன்று, செம்பவாங் மற்றும் ஈசூன் குடியிருப்பு வட்டாரங்களைச் சுற்றி ரத ஊர்வலம் நடைபெறும்.
பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் முக்கியமான சில குறிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோவில் வலியுறுத்தியுள்ளது. உறுமி மேளம் வாசிக்கும் இசைக்குழுக்கள், காவடிகள் பூட்டப்படும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வாசிக்க முடியும்.
நாதஸ்வரம், தவில் போன்ற பாரம்பரிய இசைக் கருவிகளை வாசிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை. திருவிழாவின்போது கூட்ட நெரிசல் தொழில்நுட்பம் வாயிலாக கட்டுப்படுத்தப்படும். இதற்காக எல்இடி திரைகளும் பொருத்தப்படும்.