பிப்ரவரியில் சிங்கப்பூரின் ஏற்றுமதி சற்றே குறைந்தது

பிப்ரவரியில் சிங்கப்பூரின் ஏற்றுமதி சற்றே குறைந்தது

2 mins read
இருப்பினும் பெரும்பாலான பொருளியல் வல்லுநர்களின் நம்பிக்கையில் மாற்றமில்லை
98c80241-2910-477e-8b2f-01b4370f49da
பிப்ரவரியில் முக்கிய ஏற்றுமதிகளின் மதிப்பு $14.2 பில்லியனாகப் பதிவானது. ஒப்புநோக்க ஜனவரியில் அது $14.9 பில்லியனாக இருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி பிப்ரவரி மாதம் 0.1 விழுக்காடு குறைந்து $12.99 பில்லியன் ஆனது.

இருப்பினும் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளதால் பொருளியல் வளர்ச்சி நன்றாகவே இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

சீனப் புத்தாண்டால் பிப்ரவரி மாதப் புள்ளிவிவரங்கள் பாதிக்கப்பட்டதை அவர்கள் சுட்டினர்.

சீனப் புத்தாண்டுக் காலத்தில் ஊழியர்கள் பலரும் விடுப்பில் செல்வர். குறைவான ஊழியர்களே வேலை செய்வதால் உற்பத்தியும் பொருள்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்படுவதுண்டு.

இருப்பினும் பிப்ரவரியில் பொருளியல் 4.7 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று புளூம்பெர்க் தெரிவித்திருந்த நிலையில், அது சற்றே குறைந்தது வியப்பளிப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.

ஜனவரியில் அது 16.7 விழுக்காடு வளர்ச்சி கண்டதை அவர்கள் சுட்டினர்.

மார்ச் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட பிப்ரவரி மாதத்துக்கான சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி விவர அறிக்கையில் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தைச் சுட்டியது.

மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதியே பிப்ரவரி மாதச் சரிவிற்குக் காரணம் என்று அது குறிப்பிட்டது.

இருப்பினும் இவ்வாண்டின் (2024) முதல் இரண்டு மாதங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஆண்டு அடிப்படையில் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி 8.4 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஒப்புநோக்க, சென்ற ஆண்டின் அதே காலகட்டத்தில் அது 20.4 விழுக்காடாகப் பதிவானது.

சிங்கப்பூரின் ஏற்றுமதிப் பட்டியலில் முன்னணியில் உள்ள நாடுகளுக்கான எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி பிப்ரவரியில் உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹாங்காங், அமெரிக்கா, இந்தோனீசியா ஆகியவை பட்டியலில் முன்னணி வகித்தன.

ஜப்பான், மலேசியா, தைவான், ஐரோப்பிய ஒன்றியம், தாய்லாந்து, தென்கொரியா, சீனா ஆகியவற்றுக்கான எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது.

ஒட்டுமொத்த வர்த்தகம் பிப்ரவரியில் 3.5 விழுக்காடு வளர்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜனவரியில் அது 14.1 விழுக்காடாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்