கடும் வெப்பநிலை ஆண்களின் இனப்பெருக்க ஆற்றலைப் பாதிக்கும்: என்யுஎஸ் ஆய்வு

கடும் வெப்பநிலை ஆண்களின் இனப்பெருக்க ஆற்றலைப் பாதிக்கும்: என்யுஎஸ் ஆய்வு

2 mins read
fc54863c-fede-479f-aa59-d1f2a34989e2
வெப்பநிலை உயர்வது சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதத்தை மேலும் குறைக்கக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடுமையான வெப்பநிலை ஒருவரின் உடல்நலத்தையும் உற்பத்தித்திறனையும் பாதிப்பதோடு நில்லாமல் குழந்தை பிறப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.

வெப்பநிலை உயர்வது சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதத்தை மேலும் குறைக்கக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) மேற்கொண்ட ஆய்வுத் திட்டம் தெரிவித்து உள்ளது.

2023ஆம் ஆண்டு ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் 1க்கும் கீழ் இறங்கியது. ஒவ்வொரு பெண்ணும் தமது பிரசவ காலத்தை எட்டினால் பெறக்கூடிய சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிப்பது இந்த விகிதம்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 818 ஆடவர்களின் விந்தணு மாதிரியை ஆய்வு செய்தனர்.

விந்தணு மாதிரியைத் தருவதற்கு 90 நாள்களுக்கு முன்னர் இருந்த வெப்பநிலையையும் ஆண்களைத் தாக்கிய அதிக வெப்பநிலை அல்லது 29.8 டிகிரி செல்சியஸ் என்னும் அன்றாட சராசரி வெப்பநிலையையும் அவர்கள் ஆராய்ந்தனர்.

மூன்று மாத காலத்தில் அதிகபட்ச வெப்பநிலைக்கு ஆளான ஆண்களுக்கு, எண்ணிக்கை குறைந்த விந்தணுக்களை வெளிப்படுத்தும் ஆபத்து 46 விழுக்காடு இருந்ததை ஆராய்ச்சியாளர் குழு கண்டறிந்தது.

அதேபோல குறைந்த விந்தணு செறிவை வெளிப்படுத்தும் ஆபத்து 40 விழுக்காடு அவர்களுக்கு இருந்ததும் தெரியவந்தது. அவர்களின் இனப்பெருக்க செல்களின் செயல்பாடு குறைவாகவும் மந்தமாகவும் இருந்ததும் குழுவின் கவனத்துக்கு வந்தது.

ஆராய்ச்சிக்காக விந்தணு மாதிரியை அளித்த ஆடவர்கள் தந்தைப் பருவத்தை எட்டக்கூடிய 25 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று அந்தக் குழுவில் இடம்பெற்ற ஆராய்ச்சியாளர் சேமுவெல் குந்தர் கூறினார்.

‘புரொஜெக்ட் ஹீட்சேஃப்’ என்னும் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தை பிறப்புக்கும் வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்புப் பற்றி ஆராயப்பட்டது.

ஆய்வு கண்டறிந்தவற்றை திங்கட்கிழமை (மார்ச் 18) செய்தியாளர்களிடம் டாக்டர் குந்தர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்