தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருமான வரி அதிகாரிகள் போல நடித்து $2.3 மில்லியன் மோசடி

2 mins read
d7bfee3f-2841-43ce-8d15-d74c3e3ff013
இந்த ஆண்டின் வருமான வரிப்படிவ தாக்கல் காலத்திலும் மோசடி முயற்சிகள் அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் கூறியது. - படம்: சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணைய (ஐராஸ்) அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்பட்ட மோசடியில் குறைந்தபட்சம் 52 பேர் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அந்த மோசடிச் சம்பவங்களில் ஏறக்குறைய $2.3 மில்லியன் தொகையைப் பொதுமக்கள் பறிகொடுத்தனர்.

இந்த விவரத்தை செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) ஆணையம் தெரிவித்தது.

மேலும், இவ்வாண்டு மார்ச் 1 முதல் ஏப்ரல் 18 வரை நீடிக்கக்கூடிய வருமான வரிப் படிவத் தாக்கல் காலத்திலும் மோசடிக்கான முயற்சிகள் அதிகரித்து வருவதைத் தான் கண்டதாக ஆணையம் கூறியது.

மோசடிகளில் சிக்கி ஏமாந்தோரில் 79 விழுக்காட்டினர் வருமான வரிச் சலுகை தரப்படும் என்று விரிக்கப்பட்ட வலையில் சிக்கியதாகவும் 15 விழுக்காட்டினர் முதலீடு தொடர்பான லாபங்களுக்கு வருமான வரி அல்லது மூலதன ஆதாய வரியைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட மோசடிகளுக்கு ஆளானதாகவும் ஆணையத்திடம் கடந்த ஆண்டு புகார்கள் அளிக்கப்பட்டன.

ஐந்து விழுக்காட்டினர் போலி மின்னஞ்சல் தொடர்பான மோசடிக்கும் இதர ஒரு விழுக்காட்டினர் போலி வரி ஆவணங்கள், போலி முத்திரைச் சான்றிதழ்கள் போன்ற மோசடிகளிலும் சிக்கினர்.

வருமான வரி மற்றும் பொருள் சேவை வரி செலுத்தியோருக்கு மோசடிக்காரர்கள் போலி மின்னஞ்சலை அனுப்பினார்கள்.

அதிகமான வரி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் செலுத்த வேண்டிய வரி போக எஞ்சிய தொகையை ஆணையம் திருப்பித் தர இருப்பதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

அதனைத் தொடர்ந்து ஐராஸ் இணையத்தளம் போலத் தோற்றமளிக்கும் போலி இணையத்தளம் வாயிலாக, பணம் செல்லுத்துவது தொடர்பான விவரங்களும் ஒருமுறைக்கான மறைச்சொல்லும் கேட்கப்படும்.

இதுபோன்ற மோசடிகளில் இவ்வாண்டுத் தொடக்கம் முதல் குறைந்தபட்சம் ஆறு பேர் சிக்கி $3,000 வரை இழந்துவிட்டனர்.

திருப்பித் தரப்படும் வரித்தொகை எக்காரணம் கொண்டும் கடன் பற்று அட்டை அல்லது கடன் அட்டையில் வரவு வைக்கப்படுவதில்லை என்றும் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு பேநவ் மூலமாக வரவு வைக்கப்படும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும், வரித் தொகை திருப்பித் தரப்படும் தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுவதில்லை என்றும் ‘மைடாக்ஸ்’ இணையவாசலில் விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்றும் அது தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்