நாடாளுமன்ற, நகர மன்றப் பொறுப்பைத் தொடரும் பிரித்தம் சிங்

1 mins read
01786f39-db5d-4d09-962e-3d5424355db6
மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று அரசு நீதிமன்றம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு பிரித்தம் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது மார்ச் 19ஆம் தேதியன்று இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகின.

திரு சிங் குற்றச்சாட்டுகளை மறுத்து வழக்கு விசாரணை கோரியுள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணை முடியும் வரை அவர் தமது நாடாளுமன்ற, நகர மன்றப் பொறுப்புகளைத் தொடர்ந்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை எனது நாடாளுமன்ற, நகர மன்றப் பொறுப்புகளை தொடர்வேன். தொகுதிவாசிகளைச் சந்திப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்,” என்று திரு சிங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

சிங்கப்பூரில் கூடுதல் சமச்சீரான, ஜனநாயக முறையுடனான அரசியல் சூழலை உருவாக்கும் இலக்குடன் அரசியலுக்குள் காலடி எடுத்த வைத்ததாகவும் ஆனால் அதை எட்டுவது எளிதன்று என்று தமக்குத் தொடக்கத்திலிருந்தே நன்கு தெரியும் என்றும் திரு சிங் குறிப்பிட்டார்.

“எனது அரசியல் பணிகளைத் தொடர்கிறேன். அதே சமயத்தில் சமச்சீரான, ஜனநாயக உணர்வுமிக்க அரசியல் அணுகுமுறையை இலக்காகக் கொண்டுள்ள பாட்டாளிக் கட்சியின் ஓர் அங்கமாக இருப்பதை எனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகிறேன்.

“பாட்டாளிக் கட்சி மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இலக்கை நோக்கி தொடர்ந்து பயணம் செய்வோம்,” என்று திரு சிங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்