இயந்திரத்தில் சிக்கி ஊழியர் மரணம்

1 mins read
ed79ed35-5201-4bdd-b0d4-02ad9e0ef9bf
இந்தக் கட்டடத்தில் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது. - படம்: வான்பாவ்

உணவு தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றின் இயந்திரத்தில் சிக்கி ஆடவர் ஒருவர் மாண்டுவிட்டார்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை (மார்ச் 16) பிடோக்கில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் மனிதவள அமைச்சு கூறியது.

உணவு தயாரிப்பு இயந்திரத்திற்குள் சிக்கிய அந்த சீன நாட்டவரை சக ஊழியர் ஒருவர் இயந்திர ஓட்டத்தை நிறுத்தி வெளியே மீட்டதாகவும் அது தெரிவித்தது.

பிடோக் நார்த் ஸ்திரீட் 5ல் உள்ள கட்டடம் எண் 3017லிருந்து அன்று காலை 8.25 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

மீட்கப்பட்ட ஊழியர் சுயநினைவுடன் இருந்ததாகக் காணப்பட்டார் என்று காவல்துறை கூறியது. இருப்பினும், சாங்கி பொது மருத்துவமனையில் அவர் பின்னர் உயிரிழந்துவிட்டதாகவும் அது தெரிவித்தது.

இது தொடர்பாக பிற்பகல் 3.35 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்ததாகவும் காவல்துறை கூறியது.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வரும் அதேவேளை கோயாங் என்னும் உணவுத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, சம்பந்தப்பட்ட இயந்திரம் தொடர்பான எல்லாப் பணிகளையும் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்