கடலில் விழுந்த வெளிநாட்டு ஊழியரின் உடல் கண்டெடுப்பு

2 mins read
dcc55a1f-f0f2-4489-be0f-4b628449303b
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ப.ச. இராமதாஸ், 34, சிங்கப்பூரில் சுமார் 10 ஆண்டுகள் வேலை செய்ததாகக் கூறப்படுகிறது. - படம்: ப.ச.ராமதாஸ் ஃபேஸ்புக் பக்கம்

புதிதாகத் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை (12 மார்ச்) கண்டெடுக்கப்பட்டது.

ப.ச.ராமதாஸ் என்ற அந்த 34 வயது ஆடவர் மார்ச் 9ஆம் தேதி சனிக்கிழமையன்று காணாமல் போனதை அடுத்து அதிகாரிகள் தேடல் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் கப்பல் ஒன்றுக்குக் கீழ் அவர் மூழ்கி இருந்தது கண்டறியப்பட்டது.

தமிழகத்தின் பட்டுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு ராமதாசின் சடலத்தைச் சொந்த ஊருக்கு அனுப்ப சக ஊழியர்களும் பிறரும் நிதித்திரட்டினர்.

கப்பல்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய திரு ராமதாஸ், வார நாள்களில் மரினா சவுத் பியரில் வேலை செய்ததாக ஷின்மின் நாளிதழ், மார்ச் 18ஆம் தேதியன்று வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது.

திரு இராமதாஸ், 2023, ஜூன் மாதம் சொந்த ஊருக்குச் சென்று திருமணம் செய்துகொண்டதாக அவரது ஃபேஸ்புக் பக்கத்திலுள்ள நிழற்படங்கள் காட்டுகின்றன.

10 ஆண்டுகளுக்கு மேல் கப்பல்துறையில் வேலை செய்த திரு இராமதாஸ், கப்பல்களைப் பழுதுபார்ப்பவராகவும் மின்சாரத் தொழில்நுட்பராகவும் பணியாற்றியதாக அவரது முன்னாள் சக ஊழியர் அரவிந்த் பிரகாஷ் கடந்த வெள்ளிக்கிழமை தமது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

“கடந்த வாரம் அவர் லாரி மின்கலனைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு இரவு நேரத்தில் யாரும் பார்க்காத நேரத்தில் கடலுக்குள் குதித்தார். கிட்டத்தட்ட மூன்று நாள்களுக்குப் பிறகு அவரது சடலம் கடல் அடியிலிருந்து மேற்பரப்புக்கு வந்து மிதந்துகொண்டிருந்தது,” என்று திரு அரவிந்தின் பதிவு குறிப்பிட்டது.

மார்ச் 12ஆம் தேதியன்று மரினா சவுத் வார்ஃப் நீர்ப்பகுதியில் இயற்கைக்கு மாறான மரணம் ஒன்றைப் பற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிய வந்தது. அசைவின்றிக் கண்டுபிடிக்கப்பட்ட 34 வயது ஆடவர் ஒருவரின் சடலம் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டதாக தமிழ் முரசின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்