ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து சிங்கப்பூர் திரும்பியதும் தமது கடப்பிதழை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தத் தகவலை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று வெளியிட்டது.
ஈஸ்வரன் மீது ஜனவரி 18ஆம் தேதியன்று ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவர் $800,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதையடுத்து, பிப்ரவரி 16ஆம் தேதியிலிருந்து மார்ச் 4ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் இருக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அவரது மகன் மெல்பர்னில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஈஸ்வரன் அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா செல்வதற்காக ஈஸ்வரனுக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
கூடுதலாக $500,000 ரொக்கப் பிணையும் அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சுவாசப் பிரச்சினை காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈஸ்வரன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மார்ச் 5ஆம் தேதியன்று ஈஸ்வரன் மருத்துவமனையிலிருந்து ஆஸ்திரேலியாவில் தமது தங்குமிடத்துக்குத் திரும்பினார்.
12 நாள்களுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று மருத்துவர் அவரிடம் தெரிவித்திருந்ததாக அறியப்படுகிறது.
வெளிநாட்டில் தொடர்ந்து இருக்க அவருக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் காணொளி அழைப்பு மூலம் அவர் காவல்துறை விசாரணை அதிகாரியிடம் நாள்தோறும் தொடர்புகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
அத்துடன் தமது உடல்நிலை குறித்தும் மார்ச் 19ஆம் தேதியன்று சிங்கப்பூர் திரும்புவதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பது குறித்தும் ஈஸ்வரன் தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.