5,000க்கும் அதிகமான ஆமைகளை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக ஆடவர் ஒருவர் மீது மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டது.
40 வயது ரஃபிக் சயீது ஹரிஸா அலி உசேன் மீது வனவிலங்குச் சட்டம் மற்றும் விலங்குகள், பறவைகள் சட்டம் ஆகியவற்றின்கீழ் தலா ஒரு குற்றச்சாட்டு பதிவானது.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதியன்று சாங்கி விமான நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு 5,160 ‘ரெட் இயெர்ட்’ வகை ஆமைகளை ரஃபிக் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ‘ரெட் இயெர்ட்’ வகை ஆமைகள் சிங்கப்பூரின் வனவிலங்குச் சட்டத்தின்கீழ் வனவிலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய நாட்டவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான ரஃபிக்கிற்குச் சொந்தமான இரண்டு பைகளில் அந்த ஆமைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆமைகளுக்கு எவ்வித துன்பமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ரஃபிக் தவறிவிட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஆமைகளைப் பைகளில் அவர் மறைத்து வைத்திருந்ததாகவும் ஆமைகளுக்குப் போதிய காற்று இல்லாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரஃபிக்கிற்கு $35,000 பிணை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவர் மீண்டும் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.