எச்ஐவி கிருமித் தொற்று: முந்தைய பாலியல் உறவு குறித்து பொய்யுரைத்த ஆடவர்

எச்ஐவி கிருமித் தொற்று: முந்தைய பாலியல் உறவு குறித்து பொய்யுரைத்த ஆடவர்

2 mins read
95798839-1d8c-4960-a8ec-46f9761ae7af
ரத்த தானம் அளித்தபோது வேறு ஆடவருடன் தான் பாலியல் உறவு கொண்டது குறித்து குற்றவாளி பொய்யுரைத்தார்.  - படம்: பிக்சாபே

சுகாதார அறிவியல் ஆணையத்தின் ரத்த தான இயக்கத்தில் ரத்தம் வழங்கிய ஒருவர் தான் ஆடவருடன் பாலியல் உறவு கொண்டதில்லை எனப் பொய்யுரைத்தார்.

அவருடைய ரத்தத்தில் எச்ஐவி கிருமித் தொற்று இருந்தது பின்னர் தெரியவந்தது.

இதன் தொடர்பில் வியாழக்கிழமை (மார்ச் 21) அன்று 39 வயதுடைய பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் தவறான தகவல் அளித்த ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த நபர் 2018ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அலெக்ஸ்சாண்டிரா சாலையில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்று ரத்த தானம் செய்ததாக சுகாதார அமைச்சின் வழக்கறிஞர் டான் ஜூன் ஹுவா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அன்று அவர் 11வது தடவையாக ரத்த தானம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ரத்த தானத்துக்கு முன்னர் அவர் தானம் வழங்குவோருக்கான, சுகாதார மதிப்பீட்டு கேள்விகள் அடங்கிய, உறுதி மொழிப் பத்திரத்தை நிறைவு செய்ய வேண்டி இருந்தது.

அதிலிருந்த ஒரு கேள்வியில் அவர் ஆடவர் ஒருவருடன் பாலியல் உறவு கொண்டிருந்தாரா என்று கேட்கப்பட்டது. அந்தப் படிவத்தில் உள்ள மற்றொரு கேள்வி கடந்த 12 மாதங்களில் அவருக்கு 6 மாதங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் அறிமுகமான ஒருவருடன் பாலியல் உறவு கொண்டிருந்தது உண்டா என்று கேட்கப்பட்டிருந்தது.

அவ்வாறு கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் அந்த ஆடவர் இல்லை என பதிலளித்தார். அத்துடன், கேட்கப்பட்ட அனைத்துக் கேள்களுக்கும் தாம் சரியான பதில்கள் வழங்கியுள்ளதாகவம் அந்த ஆடவர் உறுதி மொழி கூறியதாக சுகாதார அமைச்சு வழக்கறிஞர் விளக்கினார்.

அந்த ஆடவரின் ரத்தம் எவருக்கும் வழங்கப்படக்கூடாது என்று அவர் கருதினால் அவர் 24 மணிநேரமும் செயல்படும் அவசர தொலைபேசி எண் சேவையைப் பயன்படுத்தி ரகசியமான முறையில் தெரிவிக்கலாம் என்றும் அந்த ஆடவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆடவர் அந்தச் சேவையை பயன்படுத்தவில்லை.

அந்த ஆடவர் வழங்கிய ரத்தத்தில் பின்னர் எச்ஐவி கிருமித் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்