செங்காங் எல்ஆர்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கும்

செங்காங் எல்ஆர்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கும்

2 mins read
4a8c87c9-ccde-41de-8895-0f5aa58466f4
செங்காங் எல்ஆர்டி நிலையம். - படம்: சாவ் பாவ்

பயணிகளின் வசதிகளையும் அவர்களின் பயண அனுபவத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில், செங்காங் எல்ஆர்டி நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் அப்பணிகள் நிறைவடையும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

வடக்கு-கிழக்கு எம்ஆர்டி பாதையையும் செங்காங் எல்ஆர்டி பாதையையும் இணைக்கும் நிலையமாக அது அமைந்துள்ளது. செங்காங் எல்ஆர்டி பாதைக்கு நான்கு வழித் தடங்கள் உள்ளன. அவற்றில் செல்லும் இலகு ரயில்கள் 14 நிலையங்களைக் கடந்து செல்லும்.

2003ல் திறக்கப்பட்ட செங்காங் எல்ஆர்டி நிலையத்தில் தற்போது உள்ள இரு தளமேடைகளை கிழக்கு மற்றும் மேற்கு எல்ஆர்டி பாதைகளுக்குப் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏறும் இலகு ரயில் எந்த திசையில் செல்கிறது என்பதை அங்குள்ள அறிவிப்புப் பலகைகளைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

செங்காங் எல்ஆர்டி நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றவுடன், ஒவ்வொரு தளமேடையிலும் இரு பாதைகளில் செல்லும் ரயில்கள் நிற்கும். அப்படி என்றால், ஒவ்வொரு பாதையில் செல்லும் ரயில்களில் பயணிகள் ஏறுவதற்காக தனிப்பட்ட தளமேடை இருக்கும்.

அங்கு பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் தடுப்புகள் மாற்றப்படும் என்று மார்ச் 21ஆம் தேதி தெரிவித்த ஆணையம், எம்ஆர்டி நிலையங்களில் உள்ள பாதுகாப்புத் தடுப்புகளைப் போலல்லாமல் எல்ஆர்டி நிலையங்களில் சறுக்கும் கதவுகள் இருக்காது.

நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்பதால், எல்ஆர்டி செயல்பாட்டு நேரத்தில் பாதிப்பு இருக்காது. ரயில் செயல்பாட்டு நேரத்தில் செய்ய முடியாத மறுசீரமைப்புப் பணிகள் ரயில் செயல்பாட்டு நேரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையம் விவரித்தது.

காம்பஸ் ஒன் கடைத்தொகுதிக்கும் காம்பஸ் ஹைட்ஸ் கூட்டுரிமை அடுக்குமாடிக் கட்டடத்துக்கும் இடையே செங்காங் எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.

மறுசீரமைப்புப் பணிகள் பற்றி அங்குள்ள் குடியிருப்பாளர்களுக்கும் கடைத்தொகுதி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் அவர்களின் அக்கறைகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும் ஆணையம் தெரிவித்தது.

“செங்காங், பொங்கோல் நகரங்களில் நீண்டகாலமாக நிகழம் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடியிருப்பாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி திட்டத்தில் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றும் ஆணையம் விவரித்தது.

குறிப்புச் சொற்கள்