புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் (எல்ஆர்டி) சேவைகள் மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை வார இறுதி நாள்களில் (வெள்ளி முதல் ஞாயிறு வரை) ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அதாவது இரவு 10.30 மணிக்கு நிறைவுபெறும்.
சேவை நிறுத்தத்துக்கு பின்னர் கிடைக்கும் நேரத்தில் புதிய வாகனங்களும் ரயில் முறைகளும் சோதித்துப் பார்க்கப்படும்.
இரவு 10.30 மணிக்குப் பிறகு, சேவை நிறுத்தத்தால் பாதிக்கப்படும் பயணிகள் புக்கிட் பாஞ்சாங், சுவா சூ காங் நகரங்களுக்கு சேவையளிக்கும் தற்போதுள்ள பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைத் தொடரலாம்.
பேருந்து சேவைகள் 67, 171, 920, 922, 960, 963, 972, 972M, 973, 974 மற்றும் 976 ஆகியவற்றைப் பயணிகள் பயன்படுத்தலாம்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி வாகனங்களில் மேலும் இரண்டு ரயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டு சோதித்துப் பார்க்கப்படும். அந்தப் புதிய மேம்படுத்தப்பட்ட ரயில் சேவை 2024ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் தொடங்கும்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி திட்டம் 1999ல் தொடங்கப்பட்டதிலிருந்து பயன்பாட்டில் உள்ள முதலாம் தலைமுறை வாகனங்களுக்குப் பதிலாக மாற்றப்படவிருக்கும் 19 புதிய ரயில்கள் அவற்றில் அடங்கும். 2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட 13, இரண்டாம் தலைமுறை ரயில்களும் மேம்படுத்தப்படும்.
சேவை முன்கூட்டியே நிறுத்தப்படுவது பற்றி அறிவித்த நிலப் போக்குவரத்து ஆணையம், நேரடி ரயில் போக்குவரத்தை வழிநடத்தும் மற்றும் ரயில்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பதை உறுதிசெய்யும் ரயில் பாதை சமிக்ஞை சாதனத்தை மாற்றும் பணியும் நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது என்றும் ஆணையம் விவரித்தது.
மார்ச் 16ஆம் தேதியிலிருந்து புக்கிட் பாஞ்சாங் ரயில் பாதையில் சுற்றிவரும் ரயில் சேவைகளும் சனிக்கிழமைகளில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன.