சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படைக்குப் புதிய தலைவர்

2 mins read
753d3a82-6398-476f-8fa5-5220a5ebfd88
தற்காப்பு அமைச்சில் துணைச் செயலாளர் (கொள்கை) பொறுப்பில் இருந்த பிரிகேடியர் ஜெனரல் கெல்வின் ஃபான் சுய் சியோங் (இடது), மார்ச் 22ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் முன்னைய தலைவர் மேஜர் ஜெனரல் கெல்வின் கோங் பூன் லியோங்கிடமிருந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். - படங்கள்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படை மார்ச் 22ஆம் தேதியன்று தனது புதிய தலைவரை வரவேற்றது.

வெள்ளிக்கிழமை மாலை தெங்கா ஆகாயப்படைத் தளத்தில் நடைபெற்ற பொறுப்பேற்புச் சடங்கில் முன்னைய தலைவரான மேஜர் ஜெனரல் (எம்ஜி) கெல்வின் கோங் பூன் லியோங்கிடமிருந்து புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார் பிரிகேடியர் ஜெனரல் (பிஜி) கெல்வின் ஃபான் சுய் சியோங். இவர் இதற்குமுன், தற்காப்பு அமைச்சில் துணைச் செயலாளராக (கொள்கை) பதவி வகித்தார்.

பிரிகேடியர் ஜெனரல் ஃபான், 1998ல் சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்ந்தார். தற்காப்பு அமைச்சிலும் சிங்கப்பூர் ஆயுதப்படையிலும் அவர் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார். 2024ல், பிஜி ஃபான், முழுமைத் தற்காப்பு 40 இயக்கத்துக்குத் தலைமையேற்று அதை வழிநடத்தினார். மேலும், முழுமைத் தற்காப்புப் பயிற்சிகளில் நெருக்கடி காலங்களிலும் இடையூறு காலங்களிலும் சிங்கப்பூரர்களின் ஆயத்தநிலையை வலுவாக்கும் முயற்சிகளுக்கும் தலைமையேற்றார்.

தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும் எம்ஜி கோங், 2019லிருந்து சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையை வழிநடத்தி வந்துள்ளார். அவரும் தற்காப்பு அமைச்சிலும் சிங்கப்பூர் ஆயுதப்படையிலும் பல தலைமைத்துவ பொறுப்புகளை வகித்தார். கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை எப்போதும் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்தார். ஆப்கானிஸ்தான் அகதிகளை மீட்கும் நடவடிக்கை, அண்மையில் நடந்த காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருள்களை ஆகாயம் வழி கீழே வான்குடை மூலம் இறக்கியது போன்ற சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் பல்வேறு பேரிடர் உதவித் திட்டங்களுக்கு அவர் தலைமை வகித்தார்.

இந்தப் பொறுப்பு மாற்றம் சிங்கப்பூர் ஆயுதப்படையின் தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாகும். பொறுப்பு கைமாறும் நிகழ்ச்சியில் தற்காப்புப் படைகளின் தலைவர் வைஸ் அட்மிரல் ஏரன் பேங், தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை உயர் அதிகாரிகள், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் படை வீரர்கள் ஆகியயோரும் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்