வாஷிங்டன்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் ஒழுங்குமுறை கண்காணிப்பாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனால், அந்த நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்படலாம், சந்தையில் அந்த நிறுவனம் செலுத்தி வரும் ஆதிக்கம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் அமெரிக்காவில் அந்நாட்டு நீதித் துறையும், 16 மாநிலங்களின் தலைமைச் சட்ட அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனம் போட்டித்தன்மையை பாதுகாக்கும் சட்டங்களை மீறியதாகக் கூறி ஆப்பிள் நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுத்துள்ளன. ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை அங்கு நடப்பில் இருக்கும் மின்னிலக்க சந்தைப்படுத்துதல் சட்டத்தை ஆப்பிள் நிறுவனம் மீறியுள்ளதா என்று ஆராயப்பட்டு வருகிறது.
இதனால் அந்த நிறுவனப் பங்குகளின் மதிப்பு வியாழக்கிழமை (மார்ச் 21) அன்று 4.1% சரிந்து சந்தை மதிப்பில் அமெரிக்க டாலர் 113.8 பில்லியன் (S$ 151 பில்லியன்) இழப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் அமெரிக்க டாலர் 3 டிரில்லியன் மதிப்புடன் உலகின் ஆக மதிப்புமிக்க நிறுவனமாக விளங்கிய ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க நாஷ்டேக் 100, எஸ் அண்ட் பி 500 பங்குச் சந்தைகளில் இவ்வாண்டு தனது மதிப்பு சரிவதை கண்டு வருகிறது.