தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்ஆர்டி நிலையத் தளமேடைக் கதவை உடைத்தவருக்கு அபராதம்

2 mins read
485fcbc7-eb60-43f1-91b7-eb627a074dcf
குற்றம் இழைத்த டான் வீ ஜியன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பத்துக் குவளை மது அருந்திய போதையில் இருந்த ஆடவர் ஒருவர், 2023 ஆகஸ்ட் மாதம் எம்ஆர்டி நிலையத் தளமேடைக் கதவை தீயணைப்பானைக் கொண்டு அடித்து நொறுக்கினார்.

33 வயது டான் வீ ஜியனின் இந்தக் குற்றச் செயலின் காரணமாக எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட $3,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டது. அந்தத் தொகையை டான், 2023 டிசம்பரில் முழுமையாகச் செலுத்தி விட்டார்.

இரண்டு முறை குறும்புச் செயல்களைப் புரிந்து சேதம் ஏற்படுத்தியதை டான் ஒப்புக்கொண்டதை அடுத்து மார்ச் 22ஆம் தேதி அவருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2023, ஆகஸ்ட் 23ஆம் தேதி தனது வேலையிடத்திலிருந்து இரவு உணவுக்காக சக ஊழியர்களுடன் புறப்பட்ட டான், பத்துக் குவளை மது அருந்தினார். அவரது வேலையிடம், எங்கு உணவு உண்டார் போன்ற விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இல்லை.

“முழு போதையில் இருந்த டான், ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்திற்கு நள்ளிரவுக்கு சற்று பின் சென்று சேர்ந்தார். அங்கு நுழைவாயிலில் பலவந்தமாக நுழைந்தார். பின் 12.17 மணிக்கு அதே நுழைவாயிலை விட்டு பலவந்தமாக வெளியேறினார்.

“ஐந்து நிமிடம் கழித்து அங்கிருந்த இரும்புக் கதவை இரண்டு முறை உதைத்தார். பின்னர் அங்கிருந்த தீயணைப்பான் வைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பலவந்தமாகத் திறந்து அதிலிருந்த தீயணைப்பானை வெளியே எடுத்தார்.

“பின்னிரவு 12.30 மணிக்கு, டான் அருகிலிருந்த பல்பொருள் அங்காடிக் கடையின் கண்ணாடிச் சுவரை நான்கு முறை தீயணைப்பானைக் கொண்டு அடித்தார். பின்னர் தீயணைப்பானில் உள்ள திரவத்தை தான் நடக்கும் இடத்தில் தெளித்தார்.

“பிறகு எம்ஆர்டி நிலையத்துக்குள் சென்று அதன் தளமேடைக் கதவை தீயணைப்பானைக் கொண்டு அடித்தார். அதனால் அந்த கண்ணாடிக் கதவு நொறுங்கியது. மீண்டும் மற்றொரு தளமேடைக் கதவை தீயணைப்பானால் அடித்தார்.

“பின்னர் அவரிடமிருந்த தீயணைப்பானை பிடுங்கிக்கொண்டார் நிலையத்தின் மேலதிகாரி. இது குறித்து தகவல் பெற்ற காவல்துறை அதிகாரிகள் டானை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்,” என்றார் அரசுத்தரப்பு வழக்கறிஞர் எடெல் டாய்.

குறும்புச் செயல் ஒவ்வொன்றுக்கும் டானுக்கு ஈராண்டுகள் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்