ஜோகூர் பாருவில் $200,000க்கு சொந்த வீடு வாங்கிய 27 வயது சிங்கப்பூரர்

ஜோகூர் பாருவில் $200,000க்கு சொந்த வீடு வாங்கிய 27 வயது சிங்கப்பூரர்

2 mins read
3d107bb4-8fb3-4112-b12b-b7185abc6ec1
கடந்த ஆண்டு ஜோகூர் பாருவில் தாம் வாங்கிய வீட்டில் கைலி, 27. - படம்: 8வேர்ல்ட் நியூஸ்/ஃபேஸ்புக்

சிங்கப்பூரில் வீடு வாங்க முடியாததைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவில் வீடு வாங்கிய அனுபவம் குறித்து 27 வயது சிங்கப்பூரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிக்கூறுகளை ஒற்றையரான கைலி பூர்த்திசெய்யவில்லை.

எனினும், சொந்த வீடு வாங்க விரும்பிய அவர், ஜோகூர் பாருவில் S$200,000க்கு மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றை அவர் வாங்கியுள்ளார். அந்த வீட்டில் மூன்று கழிப்பறைகள் உள்ளன.

அந்த வீட்டின் விலை ‘கணிசமாகக் குறைவு’ என அவர் வர்ணித்துள்ளார்.

பதினெட்டு வயதில் கைலி தமது சொந்த இணைய சந்தைப்படுத்துதல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியதாக ‘8வேர்ல்ட் நியூஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

செல்லப்பிராணிகளுக்குத் தேவைப்படும் பொருள்களுக்கான புதிய இணைய வர்த்தகத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.

தொழில் தொடங்கி சிறிது காலம் மட்டுமே ஆகியுள்ளதால், சிங்கப்பூரில் தனியார் வீடு வாங்குவதற்குரிய நிதி நிலையை கைலி இன்னும் எட்டவில்லை.

தாம் ஒற்றையர் என்பதால், இங்கு வீவக வீடு வாங்குவதற்கான தகுதிக்கூறுகளை அவரால் நிறைவுசெய்ய இயலவில்லை.

பெற்றோரிடமிருந்து தள்ளி வசிக்க விரும்பிய அவர், ஜோகூர் பாருவில் சொந்த வீடு வாங்க முடிவெடுத்தார்.

கடந்த ஆண்டு கன்ட்ரி கார்டன் டங்கா பேயில் S$200,000க்கு வீடு ஒன்றை கைலி வாங்கினார்.

அந்த வீட்டிற்கு ஏறக்குறைய S$50,000 முன்பணம் செலுத்திய அவர், மாதக் கட்டணமாக S$1,000க்கு மேல் செலுத்தி வருகிறார்.

ஜோகூர் பாருவில் சொத்துச் சந்தையில் முதலீடு செய்வதில் நிலவும் இடர் குறித்து கைலி அறிந்துள்ளார். எனவேதான், வீடு வாங்குவது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு அப்பகுதியில் அக்கம்பக்கத்தை உணர அவர் முனைந்தார்.

“இங்கு வாடகைக்கு வீடு எடுத்த நண்பர்கள் எனக்கு உள்ளனர். ஆக, வீடு வாங்குவதற்கு முன்பு, அவர்களுடன் சேர்ந்து சில நாள்கள் தங்கினேன்,” என்று மாண்டரின் மொழியில் கைலி கூறினார்.

தமது ஜோகூர் பாரு வீடு, சிங்கப்பூரில் உள்ள தம் பெற்றோரின் வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இல்லை என்றார் அவர்.

பெற்றோர் வீட்டிற்குச் செல்ல ஒரு மணி நேரம் வரை ஆகலாம் என்றாலும், அந்தப் பயணத்தை அவர் சிரமமானதாகக் கருதவில்லை.

பெற்றோரைவிட்டு தனியாக வசிப்பதை தாம் தன்னிச்சையாகச் செயல்படும் வாய்ப்பாகவே கைலி கருதுகிறார்.

குறிப்புச் சொற்கள்