சிங்கப்பூரில் பல வட்டாரங்களில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய அதிரடிச் சோதனையில் 64 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் நான்கு பதின்மவயதினரும் அடங்குவர்.
$550,000 பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மார்ச் 18 முதல் 22ஆம் தேதி வரை அங் மோ கியோ, காம்பஸ்வேல், உட்லண்ட்ஸ், ஈசூன் போன்ற வட்டாரங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மார்ச் 23ல் தெரிவித்தது.
கஞ்சா, ‘ஐஸ்’, கெட்டமின், போதைமிகு அபின், எக்ஸ்டசி, எரிமின்-5 ஆகிய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
மார்ச் 18ஆம் தேதியன்று காம்பஸ்வேல் வாக் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அதில் இருந்த நான்கு பதின்மவயதினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்ட 18 வயது இளையர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு உடந்தையாக இரு 19 வயது இளையர்கள் இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 21ஆம் தேதியன்று ஈசூன் அவென்யூ 2ல் கார் ஒன்றை அதிகாரிகள் வழிமறித்தனர்.
அதன் 40 வயது ஓட்டுநரையும் 32 வயது பயணியையும் அவர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் ஆடவர்கள்.
காரில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
அந்த ஆடவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
அந்த வீடுகளில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணை தொடர்கிறது.

