2023ல் காசநோய் சம்பவங்கள் குறைந்தன

2023ல் காசநோய் சம்பவங்கள் குறைந்தன

2 mins read
a52d06c2-0dc0-49b8-a881-cc145dde5225
2023ல், சிங்கப்பூர் குடியிருப்பாளர்களிடையே தீவிர காசநோய் தொடர்பான 1,201 புதிய சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. - படம்: சாவ் பாவ்

உலக காசநோய் தினமான மார்ச் 24ஆம் தேதி, காசநோயை எதிர்த்துப் போராட கடப்பாடு கொண்டிருக்கும் உலகளாவிய சமூகத்துடன் சிங்கப்பூர் சேர்ந்துகொள்கிறது. 2024 உலக காசநோய் தினத்துக்கான உலக சுகாதார நிறுவனத்தின் கருப்பொருள்: ‘ஆம், காசநோய்க்கு முடிவு கட்டுவோம்’ என்பதே.

காசநோய் உலகளாவிய பொதுச் சுகாதாரத்துக்கு ஒரு மிரட்டலாக இருந்து வருகிறது. 2022ல் உலகில் 10.6 மில்லியன் பேர் காசநோய் பரவலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 1.3 மில்லியன் பேர் மரணமுற்றனர்.

2023ல், சிங்கப்பூர் குடியிருப்பாளர்களிடையே காசநோய் பரவல் தொடர்பான 1,201 புதிய சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2023ல் ஒவ்வொரு 100,000 மக்கள் தொகையில் 28.9 காசநோய் சம்பவங்கள் இருந்தன. ஒப்புநோக்க, 2022ல் ஒவ்வொரு 100,000 மக்கள் தொகையில் 30.4 சம்பவங்கள் இருந்தன.

புதிய காசநோய் சம்பவங்களில் முதியோரும் ஆண்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023ல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 1,201 சம்பவங்களில் 939 பேர் (78.2%) 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 797 (66.4) பேர் ஆண்கள்

காசநோய் குணப்படுத்தக்கூடியது, தவிர்க்கக்கூடியது. தேசிய காசநோய் திட்டத்தின் மூலம் காசநோயை முன்னதாகவே கண்டுபிடித்து, சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

காசநோயைத் தவிர்க்கவும் முன்கூட்டியே தேவையான சிகிச்சை பெறவும், சுகாதார அமைச்சின் டிபி கட்டுப்பாட்டுப் பிரிவும் டிபி தொடர்பு மருந்தகமும் ஒன்றிணைக்கப்பட்டு, இனி தேசிய காசநோய் (டிபி) பராமரிப்பு நிலையம் என்றும் தேசிய காசநோய் (டிபி) பரிசோதனை நிலையம் என்றும் அழைக்கப்படும். இவை இரண்டும் 2024 மூன்றாம் காலாண்டில் செயல்படத் தொடங்கும். பெயரில் மாற்றம் இருந்தாலும் அவற்றின் சேவைகளில் மாற்றம் இருக்காது என்று சுகாதார அமைச்சு விளக்கியது.

குறிப்புச் சொற்கள்