சாங்கி விமான நிலையத்தில் உயரத்திலிருந்து விழுந்த 20 வயது ஆடவர் மருத்துவமனையில்

சாங்கி விமான நிலையத்தில் உயரத்திலிருந்து விழுந்த 20 வயது ஆடவர் மருத்துவமனையில்

2 mins read
018c3dfb-d3cf-48f4-a6ca-cd170aa43b5a
சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் 20 வயது ஆடவர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து கிடந்தார். - படம்: ரெய்னி/சியாவ்ஹோங்ஷு
multi-img1 of 2

சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் சனிக்கிழமை (மார்ச் 23) 20 வயது ஆடவர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்துவிட்டார்.

எண் 80 ஏர்போர்ட் பொலிவார்டில் மாலை 4.10 மணியளவில் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்த சம்பவம் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. அந்த முகவரி சாங்கி விமான நிலையம் முனையம் 1க்கு சொந்தமானது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்தபோது டாக்சி நிறுத்துமிடத்துக்கு அருகே தரையில் ஒருவர் கிடந்ததை மருத்துவ உதவியாளர்கள் கண்டனர்.

அவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்த ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.

கைப்பிடிகளுக்கு இடையே தரையில் முகம் கீழே நோக்கியவாறு ஆடவர் விழுந்து கிடப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று சீன சமூக ஊடகத் தளத்தில் பகிரப்பட்டது. அந்தக் கைப்பிடிகளில் ஒன்று சேதமுற்று இருந்தது.

முனையம் ஒன்றின் இரண்டாம் தளத்தில் தம் நண்பருடன் தாம் பேசிக்கொண்டு இருந்தபோது பெரிய சத்தம் கேட்டதாக சமூக ஊடகப் பயனர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

“என்ன நடந்தது என்பதைப் பார்க்க எனக்குத் துணிவு இல்லை. எனக்கு இன்னமும் பயமாக இருக்கிறது,” என்றார் அவர்.

இந்நிலையில், ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சாங்கி விமான நிலையக் குழும பேச்சாளர், “பொதுமக்களில் ஒருவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்