உலகமயமான நிலையில் வெளியுறவுக் கொள்கை முக்கியம்: ஜெய்சங்கர்

கடினமான வெளியுறவுச் சூழலில் சிங்கப்பூர் சிறப்பாக உறவுகளைக் கையாள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.

சிங்கப்பூர் வந்துள்ள டாக்டர் ஜெய்சங்கர், பான் பசிபிக் ஹோட்டலில் சனிக்கிழமை (மார்ச் 23) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுமார் 300 பேரின் முன்னிலையில் உரையாற்றினார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கல்விக் கழகம் அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

‘பாரத் ஏன் முக்கியம்?’ என்ற டாக்டர் ஜெய்சங்கரின் நூல். படம்: ரூபா பதிப்பகம்

அண்மையில் வெளியிடப்பட்ட ‘பாரத் ஏன் முக்கியம்?’ என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ள கருத்துகளை டாக்டர் ஜெய்சங்கர் தமது உரையில் எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, தெற்காசியக் கல்விக் கழகத்தின் இயக்குநர் இணைப் பேராசிரியர் இக்பால் சிங் கேள்வி-பதில் அங்கத்தை வழிநடத்தினார்.

இன்றைய உலகமயமான நிலையின் முக்கியச் சவால்களைக் கொவிட்-19 தொற்று உணர்த்தியதாக டாக்டர் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

“அப்போது நாம் உலகின் ஒரு பகுதியையே நம் தேவைகளுக்காக நாடினோம். முகக்கவசம், அடிப்படை மாத்திரைகள்கூட கிடைக்குமா என்ற அச்சத்தில் இருந்தோம்,” என்றார் அவர்.

இந்நிலையை மாற்ற இந்தியா தன் உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதாகவும், பல்கலைக்கழகங்களுக்குக் கூடுதல் தொழில்நுட்பங்களை வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

நல்ல வெளியுறவுக் கொள்கையால், உக்ரேன் போரால் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றப் பாதிப்பிலிருந்து இந்தியர்களைத் தற்காத்ததாக அவர் குறிப்பிட்டார்.

சுய தொழில்முனைவுகளைப் பாராட்டிய டாக்டர் ஜெய்சங்கர்,“அரசாங்கமோ பெரிய நிறுவனங்களோ வேலை வழங்கும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, மக்கள் சுயதொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்,” என்றார்.

மேலும், மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இந்தியா தன்னை மாற்றிக்கொள்ள, நான்கு நிலைத் திட்டத்தை அவர் பரிந்துரைத்தார்.

‘மல்டிவெக்டரிசம்’ எனப்படும் அனைத்து முக்கியப் பங்காளிகளுடனும் நல்லுறவு கொண்டாடுவது; அண்டை நாடுகளோடு கூடுதல் பரிவுடன் நடந்து அவற்றுடனான உறவுகளை அரசியல் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து காப்பது; ஆசியான் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது; உலகின் தெற்குப் பகுதியோடு பிணைப்பை வலுப்படுத்துவது ஆகியவையே அவர் குறிப்பிட்ட வழிமுறைகள்.

சீனா-இந்தியா உறவில் சிங்கப்பூர் பங்களிப்பு

கடந்த 2020ல் சீனா-இந்தியா உறவில் எழுந்த விரிசல்களைத் தீர்க்க சிங்கப்பூரால் உதவமுடியுமா என்ற கேள்விக்கு, “சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே புரிதல் தெளிவாக உள்ளது. இது புரிந்துணர்வின்மையால் எழுந்த பிரச்சினையன்று. வெவ்வேறு தீர்மானங்களால் எழுந்த பிரச்சினை.

“அதனால் இந்தியாவும் சீனாவும் அமர்ந்து பேசித் தீர்க்க முயல்வதே இதற்குத் தீர்வு,” என்றார் டாக்டர் ஜெய்சங்கர்.

இந்தியா-பாகிஸ்தான் உறவு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரங்கள் குறித்துப் பேசுவதை இந்தியா இனியும் தவிர்க்கப் போவதில்லை என்றார் டாக்டர் ஜெய்சங்கர். தீவிரவாதத்துக்குப் பதிலடி தராதது இந்தியர்கள் பலரைச் சினமடையச் செய்திருப்பதாக அவர் கூறினார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

“ஹமாசின் அக்டோபர் 7 தாக்குதல் தீவிரவாதம்தான் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஆனால், எவ்வித பதில் நடவடிக்கையிலும் பொதுமக்களின் உயிர்ச்சேதத்தைக் குறைக்கவேண்டும். நிலைத்தன்மைமிக்க வழியில் இந்தியா மனிதநேய உதவியை வழங்கிவருகிறது. கடந்த பல்லாண்டுகளில் பாலஸ்தீனுக்கான உதவியை அதிகப்படுத்தியுள்ளோம்.

“இரு நாடு தீர்வு முக்கியம் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. போருக்குத் தீர்வுகாண முனையும் சில நாடுகளோடு இணைந்து முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம்,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

வெளிநாட்டு இந்தியர்களால் மேம்படும் உறவுப்பாலம்

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் (மாணவர்கள் உட்பட), இந்தியப் பொருளியல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக ‘பிரெய்ன் டிரெய்ன்’ என்ற திறனாளர் இழப்பு குறித்த கண்ணோட்டம் பழைமையானது என்றும் டாக்டர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இரட்டைக் குடியுரிமை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டுக் குடிமக்களுக்கு எதிர்காலத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்க வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு, அதுகுறித்துத் தமக்குத் தகவல் தெரியாது என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!