தமது தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி தமக்கே தெரியாமல் நான்கு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த நான்கு நிறுவனங்களில் ஒன்று மின்நாணய முதலீட்டு நிறுவனமாகும்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மின்நாணயத்தில் முதலீடு செய்ய மக்களுக்கு, குறிப்பாக அமெரிக்கர்களுக்கு உதவுவதாக ‘இன்விசபல் ஏஐ’ எனும் பெயரின்கீழ் செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது.
முதலீட்டாளர்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை அந்த நிறுவனம் இன்னும் திருப்பித் தராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் கூட்டரசுப் புலனாய்வுத் துறை மற்றும் பத்திரங்கள், பரிமாற்ற ஆணையத்திடம் முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தில் 150 பேருக்கும் மேற்பட்டோர் 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$2 மில்லியன்) அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஈட்டிய லாபத்தையோ அல்லது முதலீடு செய்த பணத்தையோ அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று அறியப்படுகிறது.
நான்கு நிறுவனங்களின் இயக்குநராக அந்த 49 வயது மேலாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்த நிறுவனம் குறித்து தகவல் அறிய முதலீட்டாளர்கள் பலர் சிங்கப்பூர் காவல்துறையிடம் தொடர்புகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் ஆடவரின் விவரங்களைப் பெற்றுக்கொண்டு மார்ச் 17ஆம் தேதியன்று தி சன்டே டைம்ஸ் நாளிதழின் செய்தியாளர்கள் அவரது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக்குச் சென்று அவருடன் பேசினர்.
அவருடன் இந்த விவகாரம் பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
ஆணையத்தின் பதிவில் அவரது பெயர், அடையாள அட்டை எண், முகவரி இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நான்கு நிறுவனங்களின் இயக்குநராக இருப்பது தமக்கே தெரியாது என்றார் அவர்.
2008ஆம் ஆண்டு தாய்லாந்தில் தாம் விடுமுறைப் பயணம் மேற்கொண்டபோது தமது பணப்பையைத் தொலைத்ததாக அவர் கூறினார்.
அதன் மூலம் அவரது தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டிருக்கக்கூடும் என்றார் அவர்.
இதுகுறித்து அந்த ஆடவர் புகார் அளித்திருப்பதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.
பெக்சோ, சின்டேரி, எக்ஸ்பி இன்டர்நேஷனல் ஆகியவை அந்த மற்ற மூன்று நிறுவனங்களாகும்.
அவை இன்னும் செயல்பட்டு வருகின்றன என்று ஆணையத்தின் பதிவுகள் காட்டுகின்றன.

