நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப முறையை பயிற்றுவிக்கப் பயன்படுத்தினால் அதுகுறித்து பயனாளர்களிடம் விளக்க வேண்டும்.
புதிய தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்கீழ், ஒரு நிறுவனம் அல்லது சேவை வழங்குவோரின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்புகளில் பயனர்களின் தனிப்பட்ட தரவு எவ்வாறு மற்றும் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது பயனர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட விவரம் ஏன், எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று அவர்களிடம் விளக்க வேண்டும். அந்தப் பயனர்கள் ஏற்கெனவே அதற்கு அனுமதி அளித்திருந்தாலும் புதிய தனிநபர் தரவுப் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு இதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
வழங்கப்படும் சேவைக்கு பயனர்களின் அந்தத் தரவுகள் எவ்வாறு தொடர்புடையவை என்பது குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் அந்தத் தரவுகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு முறை எடுக்கும் முடிவுகளில் பயனர்களின் தரவுகள் எவ்வகையில் அடையாளம் காணப்படுகிறது என்பதையும் பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு திரைப்படத்தை இணையம் வழி பலமுறை பார்த்திருந்தால், அந்த வகையில் சிறந்த திரைப்படப் பரிந்துரைகளுக்கு அந்தத் தரவுகள் பயன்படுத்தப்படலாம் என்று பயனர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு பரிந்துரை மற்றும் முடிவு அமைப்புகளில் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவது குறித்த ஆலோசனை வழிகாட்டுதல்கள் என்ற தலைப்பில் இந்த வழிகாட்டுதல்களை தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் மார்ச் 1ஆம் தேதி அன்று வெளியிட்டது.
நிறுவனங்கள் தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு கையாள வேண்டும் மற்றும் அதன் பயன்பாடு குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இணைய பாதுகாப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கி நிறுவனம், கணினிப் பயனர்களில் பெரும்பாலோர் தரவுச் சேகரிப்பு குறித்து அறிந்திருக்கவில்லை. எனவே, அவர்களுக்கு தங்கள் தரவுகளை செயற்கை நுண்ணறிவு பயிற்றுவிப்புக்கு பயன்படுத்துவதற்கான விருப்பத்தைத் தடை செய்வதற்கான வாய்ப்பையும் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

