வெயில் சுட்டெரித்த போதிலும் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றத் திரளாக வந்தனர்.
மேள, தாள இசை முழங்க திருவிழாவில் ஏறத்தாழ 8,000 பக்தர்கள் கலந்துகொண்டனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி, 1,390 சுயமாகத் தயாரிக்கப்பட்ட பால்குடங்கள், 963 கோயில் பால்குடங்கள், ஏறக்குறைய 292 காவடிகள் ஏந்தி முருகருக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
காவடி, பால்குடம் ஊர்வலம் சுமுகமாக நடைபெறக் கிட்டத்தட்ட 200 கோயில் தொண்டூழியர்கள் சேவையாற்றினர். கடுமையான வெப்பத்தில் பக்தர்களின் தாகத்தைத் தணிக்க ஊர்வலத்தில் தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் மதிய வேளையில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கோலாகலமான உணர்வை ஊட்டும் இசையை உறுமி, மேளம் முதலிய தாளக்கருவிகள், காவடிகள் தயார்ப்படுத்தும் இடத்தில் களைகட்டின. சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பங்குனி உத்திரத் திருவிழாவிற்குச் சிறப்பு வருகை புரிந்திருந்தார்.
முருகப்பெருமான் தரிசனத்தைப் பெற்ற பிறகு அவர் திருவிழாவின் ஒரு பகுதியாக முருகப் பெருமானுக்குச் செய்யப்பட்ட சிறப்பு அறுபடை வீடு அலங்காரத்தையும் கண்டு மகிழ்ந்தார்.
இடும்பன் காவடி எடுத்த பக்தர்களில் ஒருவரான எம். பிரசாந்த், 25, முன்பு இறைபக்தி இல்லாமல் இருந்ததாகவும் தனது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டதைத் தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நிகழ்வுகளுக்கு 10 ஆண்டுகளாகக் காவடி எடுத்து வருவதாகவும் கூறினார்.
“பங்குனிக்கு நான் இரண்டாவது ஆண்டாக காவடி எடுக்கிறேன். காவடி எடுக்கத் தொடங்கிய பிறகு நிறுத்த முடியவில்லை,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“என் தாயாருக்கு நீண்டகாலமாக மனச்சோர்வு இருந்து வந்தது. என் தந்தை பல ஆண்டுகளாக காவடி எடுத்து வந்தார். இப்பொழுது நான் சில ஆண்டுகளாக எடுத்துவருகிறேன்.
“முருகப்பெருமான் என் தாயாரைக் கைவிடவில்லை. அவருக்கு நான் நன்றி செலுத்தும் விதமாக காவடி ஏந்தி வருகிறேன்,” என்று சொன்னார் சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணியாற்றும் வைஷாஷ்டகன் ரமேஷ், 31.
“நான் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு வருவேன். தொண்டூழியர்கள் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள். பக்தர்களுக்குக் கோயிலில் ஏற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன,” என்றார் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர் வீராசாமி கோவிந்தராஜூ, 65.
“ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் நான் பங்குனி உத்திரத்திற்கு முடி காணிக்கை செலுத்துவேன். நானும் எனது நண்பர்களும் ஒன்றாக முருகப்பெருமானுக்கு முடி இறக்குவோம்,” என்று சோலை மதி, 44, கூறினார்.
திருவிழா ஏற்பாடுகள் பெரும்பாலும் சீராக இருந்தாலும், பால்குடம் எடுத்த பக்தர்களுக்கும் காவடி எடுத்தவர்களுக்கும் ஊர்வலத்தில் நடந்து செல்ல தனிப்பட்ட பாதைகள் அமைக்கப்படவில்லை. இதனால் நெரிசல் அதிகம் ஏற்பட்டதாகச் சிலர் கூறினர்.
“பொதுவான ஊர்வலப் பாதையாக இருந்ததால் பக்தர்கள் அவர்களின் விருப்பத்திற்கு நடந்து சென்றனர். கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. பக்தர்கள் சிலர் முந்திச்செல்ல வேண்டும் என்பதற்காக வரிசையில் சரியாக நிற்கவில்லை.
“தாங்க முடியாத வெயிலில் எனது மருமகள் பால்குடம் தூக்கிக்கொண்டுவர சிரமப்பட்டார். தனிப்பட்ட பாதைகள் அமைத்திருக்கலாம்,” என்றார் தாதிமைத் துறையில் இருக்கும் ஆர். செல்வராணி, 68.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கோயில் துணைத் தலைவர் திரு இ. ராமலிங்கம், பக்தர்கள் கூறியதைத் கருத்தில் கொள்வதாகவும் அடுத்தாண்டு பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் மேம்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.
கோயில் செயலாளர் தனேந்திரன் தேவேந்திரன் கூறுகையில், இவ்வாண்டு வெயில் மிக அதிகமாக இருந்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் சேவையாற்றிய தொண்டூழியர்கள் தங்களால் இயன்றவரை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கடமைப்பட்டிருந்ததாகக் கூறினார்.