சண்முகம்: ஹமாஸ் போர் குறித்து இஸ்‌ரேலியத் தூதரகத்தின் பதிவு ஏற்றுக்கொள்ள முடியாதது

சண்முகம்: ஹமாஸ் போர் குறித்து இஸ்‌ரேலியத் தூதரகத்தின் பதிவு ஏற்றுக்கொள்ள முடியாதது

2 mins read
53856e7c-7cf0-43e9-b602-55ac550bb667
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹமாஸ் போர் தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள இஸ்‌ரேலியத் தூதரகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் திங்கட்கிழமையன்று (மார்ச் 25) தெரிவித்தார்.

சிங்கப்பூர் அரசாங்கம் அதிருப்தி தெரிவித்த பிறகு, அந்தப் பதிவு அகற்றப்பட்டதாக அவர் கூறினார்.

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை மேற்கோள்காட்டி இஸ்‌ரேலின் நிலையை வலுப்படுத்த இஸ்‌ரேலியத் தூதரகம் முயன்றதாகத் தெரிகிறது.

திருக்குர்ஆனில் இஸ்‌ரேல் என்ற சொல் 43 மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனம் என்ற சொல் ஒருமுறைகூட அதில் இடம்பெறவில்லை என்றும் தூதரகத்தின் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் உள்ள பல்லின, பல சமய மக்களிடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் இஸ்ரேலியத் தூதரகத்தின் பதிவு அமைந்ததாக அமைச்சர் சண்முகம் சாடினார்.

அரசியல் கருத்துகளை முன்வைக்க சமய நூல்களில் இடம்பெறும் வாசகங்களை மேற்கோள் காட்டுவது தவறு என்றார் அமைச்சர் சண்முகம்.

“வரலாற்றை மாற்றி எழுத இஸ்‌ரேல் முயற்சி செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது,” என்றார் அவர்

நாட்டில் உள்ள முஸ்லிம்கள், யூதர்கள் உட்பட அனைவரின் பாதுகாப்புக்கு சிங்கப்பூர் முன்னுரிமை வழங்குகிறது என்ற அவர், சிங்கப்பூரில் துடிப்புமிக்க யூதச் சமூகம் இருப்பதைச் சுட்டினார்.

இத்தகைய பதிவுகள் நாட்டில் பதற்றநிலையையும் உள்ளூர் யூதச் சமூத்தினருக்கு அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று அமைச்சர் சண்முகம் எச்சரித்தார்.

சிங்கப்பூர் மக்களின் பாதுகாப்புக்கும் நாட்டின் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்கள் அமைந்தால் அரசாங்கம் அதில் தலையிடுவது திண்ணம் என்று திரு சண்முகம் தெரிவித்தார்.

இஸ்‌ரேலியத் தூதரகம் வெளியிட்ட பதிவு மிகவும் முறையற்றது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து சிங்கப்பூரில் உள்ள இஸ்‌ரேலியத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய அந்தக் கருத்தைப் பதிவிட்டவருக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது மார்ச் 25ல் தெரிவித்தது.

“இஸ்‌ரேலியத் தூதரகம் சிங்கப்பூரில் உள்ள அனைத்து சமயங்களையும் சிங்கப்பூரில் இருந்துவரும் இன நல்லிணக்கத்தையும் மதிக்கிறது.கருத்தைப் பதிவிட்டவருக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
கா சண்முகம்இஸ்‌ரேல்