மூலாதாரப் பணவீக்கம் பிப்ரவரியில் 3.6%ஆக உயர்வு

1 mins read
a702b32c-1e57-4e8e-81d7-974599292ee9
ஜூலை மாதத்திற்குப் பிறகு மூலாதாரப் பணவீக்கம் 3.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பயனீட்டாளர் விலைகள் பிப்ரவரியில் எதிர்பார்க்கப்பட்டதைவிட உயர்ந்தன.

தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளைத் தவிர்த்த மூலாதாரப் பணவீக்கம், ஆண்டு அடிப்படையில் பிப்ரவரியில் 3.6 விழுக்காடாக உயர்ந்ததை திங்கட்கிழமை (மார்ச் 25) வெளியிடப்பட்ட அதிகாரபூர்வத் தரவு காட்டியது.

கடந்த ஆண்டு ஜூலைக்குப் பிறகு பதிவான ஆக அதிக மூலாதாரப் பணவீக்கம் அது. ஜனவரியில் பணவீக்கம் 3.1 விழுக்காடாக இருந்தது.

தங்குமிடச் செலவுகள் அதிகரித்ததன் எதிரொலியாக ஒட்டுமொத்த பணவீக்கமும் பிப்ரவரியில் 3.4 விழுக்காடாகக் கூடியது. ஜனவரியில் அது 2.9 விழுக்காடாக இருந்தது.

பிப்ரவரியின் மூலாதார, ஒட்டுமொத்த பயனீட்டாளர் விலைகள் பகுப்பாய்வாளர்களின் முன்னுரைப்புகளை விஞ்சின. பொருளியல் நிபுணர்களிடம் ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில், மூலாதாரப் பணவீக்கம் 3.4 விழுக்காடாகவும் ஒட்டுமொத்த பணவீக்கம் 3.3 விழுக்காடாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.

வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் இவ்வாண்டு மூலாதார, ஒட்டுமொத்த பணவீக்கம் 2.5 விழுக்காடு முதல் 3.5 விழுக்காடு வரை இருக்கும் என்ற கணிப்பில் மாற்றம் செய்யவில்லை.

தங்குமிடச் செலவுகள் பிப்ரவரியில் 3.9 விழுக்காடாகக் கூடியதைத் தரவு காட்டியது. ஜனவரியில் அவை 2.1 விழுக்காடாக இருந்தன.

விமானப் பயணச்சீட்டு விலையும் விடுமுறைச் செலவுகளும் கூடியதால் சேவைப் பணவீக்கம் 4.2 விழுக்காடாக அதிகரித்தது. உணவுப் பணவீக்கம் 3.8 விழுக்காடாக ஏற்றம் கண்டது.

ஆனால், தனியார் போக்குவரத்துப் பணவீக்கம் பிப்ரவரியில் 1.4 விழுக்காடாகக் குறைந்தது. ஜனவரியில் அது 2.9 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்