ஏமாற்று வேலை: பேருந்துச் சேவை நிறுவன உரிமையாளருக்குச் சிறை, அபராதம்

ஏமாற்று வேலை: பேருந்துச் சேவை நிறுவன உரிமையாளருக்குச் சிறை, அபராதம்

2 mins read
909cbad4-b78e-4dce-a2d3-dd4451b8c2d8
திங்கட்கிழமை அரசு நீதிமன்றத்துக்கு வந்த சுந்தரம் ரத்னம், 51. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேருந்துப் போக்குவரத்துச் சேவை வழங்கிய நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவருக்கு, தமது வாகனங்களில் ஒன்று அனுமதிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாட்டை மீற அனுமதித்த சதித்திட்டத்தில் பங்கு வகித்ததற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எஸ்வி பேருந்துப் போக்குவரத்துச் சேவை நிறுவன உரிமையாளரான சுந்தரம் ரத்னம், 51, சம்பந்தப்பட்ட பேருந்தை மணிக்கு 70 முதல் 75 கிலோமீட்டர் ஓட்டினார். அவருக்கு $500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இரண்டு மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு திங்கட்கிழமை (மார்ச் 25) 13 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சாலைப் போக்குவரத்து (மோட்டார் வாகனங்கள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள்) சட்டத்தின்கீழ் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வாகனங்களைப் பழுதுபார்ப்பவரான டீ வெய் சாய், 45, பரிசோதனைக்கு முன்பு வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைச் செயல்படுத்தி, பரிசோதனைக்குப் பிறகு அதைச் செயலிழக்கச் செய்தார். மூன்று மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவருக்கு மார்ச் 22ஆம் தேதி 21 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்றாமவரான டி&எல் டிரான்சிட் நிறுவன இயக்குநரான 51 வயது டியோ சியோ மெங் சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. மூன்று சிங்கப்பூர் ஆடவர்களுக்கு எதிராக 2022 டிசம்பரில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சுந்தரத்தின் பேருந்து போன்ற வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்தைத் தாண்டாமல் இருக்க, அவற்றில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

சுந்தரத்தின் பிணைத் தொகை $5,000ஆக நிர்ணயிக்கப்பட்டது. தண்டனையை ஆற்றத் தொடங்க ஏப்ரல் 1ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் அவர் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்