ஹைஃபிளக்ஸ் தொடர்பான இரண்டு வழக்குகளுக்கு ஒரே நேரத்தில் விசாரணை

ஹைஃபிளக்ஸ் தொடர்பான இரண்டு வழக்குகளுக்கு ஒரே நேரத்தில் விசாரணை

2 mins read
d6cd7896-1c68-411e-a23d-1b2e99b8675c
ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஒலிவியா லம்மிடமிருந்து இழப்பீடு கோரப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஒலிவியா லம்முக்கும் முன்னாள் கணக்குத் தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜிக்கும் எதிரான உரிமையியல் வழக்குகள் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை ஒரே நேரத்தில் நடத்த லம் சமர்ப்பித்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வழக்குகளை ஒரே நேரத்தில் நடத்துவதால் செலவு குறையும் என்றும் நேரம் மிச்சமாகும் என்றும் சௌகரியமாக இருக்கும் என்றும் லம் தெரிவித்ததற்கு நீதிபதி கோ யிஹான் இணக்கம் தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகளை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்றும் கேபிஎம்ஜியும் கேட்டுக்கொண்டது.

இரு வழக்குகளுக்கும் இடையே தொடர்பில்லாத விவகாரங்கள் இருப்பதாகவும் அவை மிகவும் முக்கியம் என்பதாலும் வழக்கு விசாரணைகளை ஒரே நேரத்தில் நடத்தக்கூடாது என்றும் ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், இரு வழக்குகளுக்கும் இடையே அத்தகு தொடர்பில்லா விவகாரங்கள் உள்ளன என்றும் அவை மிகவும் முக்கியம் என்றும் நீதிபதி கோ கூறினார்.

ஹைஃபிளக்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி லம் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளவில்லை என்று கூறி, அவர் மீது ஹைஃபிளக்ஸ் நிறுவனமும் அதன் இரு துணை நிறுவனங்களான ஹைட்ரோகெம் மற்றும் துவாஸ்பிரிங் நிறுவனங்களுடன் ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தையும் ஹைட்ரோகெம் நிறுவனத்தையும் முறைப்படி மூட நியமிக்கப்பட்ட திரு கொசிமோ பொரேலியும் 2022ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்தனர்.

இந்த நிறுவனங்களுடன் இணைந்து திரு பொரேலியும் குறைந்தது $690.6 மில்லியன் இழப்பீடு கோருகிறார்.

2011ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தங்கள் நிறுவனங்களுக்கான கணக்குத் தணிக்கைப் பணிகளை கேபிஎம்ஜி முறையாகச் செய்யவில்லை என்று கூறி, அந்த இரண்டு ஹைஃபிளக்ஸ் நிறுவனங்களும் துவாஸ்பிரிங்கும் வழக்கு தொடுத்துள்ளன. கேபிஎம்ஜியிடமிருந்து அவை $684.6 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோருகின்றன.

குறிப்புச் சொற்கள்