ரவி மேனன் முதலாவது பருவநிலை நடவடிக்கைத் தூதராக நியமனம்

ரவி மேனன் முதலாவது பருவநிலை நடவடிக்கைத் தூதராக நியமனம்

3 mins read
47eba284-5fa4-428e-a0b2-ac0c0cec87a2
திரு ரவி மேனன் அனைத்துலக பருவநிலை நடவடிக்கைத் தளங்களிலும் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான திரு ரவி மேனன், சிங்கப்பூரின் முதலாவது பருவநிலை நடவடிக்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பொறுப்பில் அவர், உள்ளூர் பங்காளிகளுடன், குறிப்பாக வர்த்தகச் சமூகத்துடன் பொது-தனியார் பங்காளித்துவத்தைப் பலப்படுத்துவார். உலகளாவிய பருவநிலை சவால்களை எதிர்கொள்வதில் அவர்களின் பங்களிப்பைப் பலப்படுத்த அவர் உதவுவார்.

திரு ரவி மேனன் அனைத்துலக பருவநிலை நடவடிக்கைத் தளங்களிலும் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பார் என்று தேசிய பருவநிலைமாற்ற செயலகம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) தெரிவித்தது.

அரசாங்கத்தின் பருவநிலைக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கை தொடர்பில் அவர் தேசிய பருவநிலைமாற்றச் செயலகத்துக்கு ஆலோசனை வழங்குவார். சிங்கப்பூரின் முதலாவது பருவநிலை நடவடிக்கைத் தூதர்; தேசிய பருவநிலைமாற்ற செயலகத்தின் மூத்த ஆலோசகர் என திரு ரவியின் பணி ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்கும்.

உலகளாவிய பருவநிலை பேச்சுவார்த்தைகளில் நிதியுதவி அதிக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்பவும் நாடுகள் உதவ அதிக நிதி தேவைப்படுவது போன்ற பின்னணியில் திரு ரவி மேனன் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் என்ற முறையில் திரு ரவி மேனன், பசுமை நிதிச் சூழலை உருவாக்கவும் எதிர்காலத்தில் குறைந்த கரிமத்தை நோக்கிய சிங்கப்பூர் மற்றும் ஆசியாவின் மாற்றத்துக்கும் உதவியுள்ளார் என்று தேசிய பருவநிலைமாற்றச் செயலகம் கூறியது.

உதாரணத்துக்கு, பருவநிலை நிதி இடைவெளியைக் குறைத்தல், ஆசியாவில் பசுமைத் திட்டங்களுக்கு கூடுதல் நிதியளித்தல் எனும் ஆசிய மாறுதல் பங்காளித்துவத்துக்கு நிதியளித்தல் (ஃபாஸ்ட்-பி) எனும் கலப்பு நிதித் தளத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளுக்கு திரு ரவி தலைமையேற்றார்.

2023 டிசம்பர் துபாயில் நடைபெற்ற காப்28 பருவநிலை மாநாட்டில் அறிவித்தபடி, பசுமை எரிசக்தி மற்றும் மின்சார உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு US$5 பில்லியன் டாலர் (SGD $6.6 பில்லியன்) நிதி திரட்ட ‘ஃபாஸ்ட்-பி’ தளம் இலக்கு கொண்டுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கமும் 2023ல் கூறியதுபோல, பசுமைத் திட்டங்களுக்கு நிதியாதரவும் முதலீடுகளும் அளித்து வங்கிகளுக்கும் தனியார் துறைக்கும் நம்பிக்கை ஊட்ட தயாராக உள்ளது. அவை மானியங்கள் மூலமாகவோ மிகவும் சாதகமான கடன்களாகவோ வழங்கப்படும்.

பசுமை வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பசுமை அல்லாத அதன் தொடர்பான மாறுதல் திட்டங்களுக்கும் வங்கிகளும் நிதிக் கழகங்களும் நிதியளிக்க வகை செய்யும் சிங்கப்பூர்-ஆசியா டெக்ஸோனமி திட்டம் உருவாக திரு ரவியும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

“பருவநிலை நிதி தொடர்பான வலுவான அனைத்துலக கட்டமைப்பிலும் திரு ரவிக்கு அணுக்கத் தொடர்புண்டு. மத்திய வங்கிகள் கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியளித்தல் மேலதிகாரிகள் மற்றும் கரிமமற்ற நிலைக்கான கிளாஸ்கோ நிதிக் கூட்டணியின் ஆசிய-பசிபிக் ஆலோசனைக் குழு போன்ற அனைத்துலகக் குழுக்களுக்கும் திரு ரவி தலைமை தாங்கியுள்ளார்,” என்று தேசிய பருவநிலைமாற்றச் செயலகம் விவரித்தது.

திரு ரவி, சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து 2024 ஜனவரி 1ஆம் தேதி விலகினார்.

ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் ஆக அதிக காலம் (2011) இருந்தவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ள திரு ரவி, நாட்டின் நிதி இருப்பை நிர்வகித்தார், நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார், நிதித் துறையையும் சிங்கப்பூரை ஒரு நிதி நடுவமாக நிலைத்திருக்க செய்யும் முயற்சியையும் மேற்பார்வையிட்டார்.

குறிப்புச் சொற்கள்