பிப்ரவரி மாத உற்பத்தித் துறை 3.8% வளர்ச்சி

பிப்ரவரி மாத உற்பத்தித் துறை 3.8% வளர்ச்சி

2 mins read
f9d8e615-36da-4640-a39d-298b10337a38
சிங்கப்பூரின் உற்பத்தித் துறை, பிப்ரவரி மாதம் ஆண்டு அடிப்படையில் பார்க்கையில் 3.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை, பிப்ரவரி மாதம் ஆண்டு அடிப்படையில் பார்க்கையில் 3.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது என்று மார்ச் 26ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவு தெரிவிக்கிறது.

புளூம்பர்க் நடத்திய கருத்துக் கணிப்பில் பொருளியல் நிபுணர்கள் கணித்த வளர்ச்சியைவிட இது 0.5% அதிகம்.

நிலையற்ற உயிர்மருத்துவத் தொழில்துறையைத் தவிர்த்து, பிப்ரவரி மாத உற்பத்தி 1.4 விழுக்காடு அதிகரித்தது.

இருப்பினும், ஜனவரி மாத உற்பத்தி வளர்ச்சி முன்பு 1.1% என்று முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் 0.6 விழுக்காடு குறைந்தது என்று பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் புள்ளி விவரங்கள் காட்டின.

முக்கியமான மின்னணுவியல் தொழில்துறை ஜனவரியில் 4.7% சரிவுக்குப் பிறகு பிப்ரவரியில் 2.6% வளர்ச்சி கண்டது பிப்ரவரி மாத வளர்ச்சிக்கு ஊக்கமாக அமைந்தது.

தொழில்துறைகளில், தகவல்தொடர்பு மற்றும் பயனீட்டாளர் மின்னணுவியல் துறை 30.9 விழுக்காடும் குறைகடத்தித் துறை 2.1 விழுக்காடும் இதர மின்னணுத் தொகுதிகள் மற்றும் கூறுகள் 0.3 விழுக்காடும் வளர்ச்சி கண்டன. இருப்பினும், கணினி சாதனங்கள் மற்றும் தரவு சேமிப்புத் துறை 10.7% சுருங்கியது.

உயிர்மருத்துவ தொழில்துறை பிப்ரவரியில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது.

ஜனவரியில் 25.9% சுருங்கிய பிறகு, பிப்ரவரியில் அது 27.4% வளர்ச்சி கண்டது.

மருந்தியல் துறை 73.2% வளர்ச்சி கண்டது.

மாறாக, மருத்துவப் பொருள்களின் குறைவான ஏற்றுமதிகள் காரணமாக மருத்துவத் தொழில்நுட்பத் துறை 3.9% சரிந்தது என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.

பிப்ரவரி மாதத்தின் மற்றோர் ஊக்கமாக, வேதித் துறை 11.2% ஏற்றம் கண்டது. 2023ல் குறைந்த உற்பத்தி அடிப்படையிலும் பெட்ரோலிய வேதித் துறை 22.3% அதிகரித்தது என்றும் கழகம் கூறியது. இதற்கு நேர்மாறாக, வாசனைத் திரவியங்களின் குறைந்த உற்பத்தி காரணமாக வேதித் துறையின் மற்ற பிரிவு 8.2% குறைந்தது.

போக்குவரத்துப் பொறியியல் துறை சாதனை அளவாக 19.6% ஏற்றம் கண்டது. இந்தத் துறையில் உள்ளடக்கப்பட்டுள்ள விண்வெளித் துறை 37.3% விரிவடைந்தது. இருப்பினும், சீனப் புத்தாண்டு விடுமுறை காரணமாக கப்பற்பட்டறையில் நடவடிக்கைகள் குறைந்திருந்ததால், கடல் மற்றும் கடல்சார் பொறியியல் துறை 3.5% சரிந்தது.

இதர துறைகளில் உற்பத்திச் சரிவு தென்பட்டது. பொதுவான உற்பத்தித் துறை 3.4 விழுக்காடும் துல்லியப் பொறியியல் துறை 19.9 விழுக்காடும் துல்லியத் தொகுதிகள் மற்றும் கூறுகள் துறை 15.1 விழுக்காடும் சரிந்தன என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்